உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் பெருஞ் சேரல் இரும்பொறையும் தமயன் - தம்பி முறையினர் என்று (தகடூர் யாத்திரை, 7ஆம் பாட்டினால்) விளங்குகிறது. சேரமன்னன் படை யெடுத்து வந்து தகடூர்க் கோட்டையை முற்றுகையிடுகிறவரையிலும், தகடூர் மன்னன் அதிகமான், கோட்டைக்குள்ளே இருந்தான் என்று தெரிகிறது. இதனை நச்சினார்க்கினியர் கூறுகிறார். "ஒருவன் மேற் சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும். சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம்” என்று தொல்காப்பியப் புறத்திணை யியல் உரையில் இவர் கூறுவதிலிருந்து அறியலாம். தகடூர்ப் போரில், சேரன், சோழன் பாண்டியன் என்னும் மூவேந்தரும் அதிகமான் நெடு மானஞ்சி (இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்), இவன் மகன் அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, மலையமான் திருமுடிக்காரி (இவனும் கடையெழு வள்ளல்களில் ஒருவன்), பெரும்பாக்கன், நெடுங் கோளாதன் முதலிய பல வீரர்களும் போர் செய்த செய்தி கூறப் படுகிறது. அரிசில்கிழார், பொன்முடியார் முதலிய புலவர்கள் பாடிய செய்யுள்கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன.

கடைச்சங்க காலத்திலேயே, கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தகடூர்ப் போர் நிகழ்ந்தது. இப்போர் நிகழ்ந்த காலத்திலேயே பொன்முடியார், அரிசில் கிழார் (இவர் தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறையின் அமைச்சர்) முதலிய புலவர்கள் பாடிய செய்யுள்கள் தகடூர் யாத்திரை என்னும் நூலில் காணப்படுகிறபடியினாலே, இந்த நூல் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாதல் வேண்டும்.

ஆனால், தகடூர் யாத்திரை மிகப் பிற்காலத்து நூல் என்று திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருதுகிறார். இவ்வாறு இவர் கருதுவதற்குக் காரணம், உரையாசிரியர் (இவர் சங்ககாலத்திற்கு மிக மிகப் பிற்பட்டவர்) கூறும் செய்தியே. அதாவது, “தொன்மை என்பது உரை விராய் பழைமையாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வன” என்று பேராசிரியர் என்னும் உரையாசிரியர் (தொல். செய்யுளியல். “தொன்மைதானே, உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே” என்னும் சூத்திர உரை) கூறுகிறார். இவ்வுரையாசிரியர் கூற்றை ஆதாராமாகக் கொண்டு தகடூர் யாத்திரை பிற்காலத்து எழுதப்பட்ட பழைய கதை என்று கூறுகிறார். என்னை? "இது (தகடூர் யாத்திரை) சரித்திர