உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இதன் பிறகு வசன நடையில் எழுதப்பட்ட இலக்கண நூல், தாண்டவராய முதலியார் அவர்கள் எழுதிய இலக்கண வினா விடையாகும். சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்த கிளார்க் துரையவர்களின் விருப்பப்படி அச்சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்த தாண்டவராய முதலியார் அவர்கள் 1820- இல் இவ்விலக்கண நூலை எழுதினார். இதன் முகப்புப் பக்கம் படத்தில் காட்டியபடி அச்சிடப்பட்டிருந்தது.

ல்

6

அக்காலத்தில் ஆங்கிலமொழி அரசாங்க மொழியாக உத்தி யோக தோரணையில் அமையவில்லை. ஆகவே, ஆங்கிலேய உயர்தர உத்தியோகஸ்தர்களும் தாங்கள் பணிபுரியும் பகுதியில் வழங்குகிற நாட்டு மொழியைக் கற்கவேண்டிய கட்டாயம் இருந்தது. சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் மொழிகள் வழங்குகிறபடியால் இந்த மொழிகளைக் கற்கும் ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களுக்காகச் சென்னைக் கல்விச்சங்கம் அமைக்கப்பட்டது. இதற்காகத் தமிழ்ப் புலவர்களும் நியமிக்கப் பட்டனர். இந்தச் சங்கத்தின் சார்பாகச் சில தமிழ்ப் புத்தகங்கள் (வசன நூல்கள்) அச்சிற் பதிப்பிக்கப்பட்டன.

புத்தகச் சங்கம்

சென்னைப் பாடப்புத்தக சங்கம்' என்னும் சங்கம் 1850-ல் ஏற்பட்டுப் பல வசன நூல்களை வெளியிட்டது. இந்தச் சங்கம் அளித்த பரிசு காரணமாகப் பல வசன நூல்கள் வெளிவந்தன. 'இராபிசன் குரூசோ’, ‘இந்திய சரித்திரம்’, ‘உலக சரித்திரம்' முதலிய சிறந்த மொழி பெயர்ப்பு நூல்கள் இச்சங்கத்தார் அளித்த பரிசு காரணமாக வெளிவந்தவை. பாடசாலைகளுக்கு வேண்டிய முறைப்படிப் பாடப்புத்தகங்கள் இச்சங்கத்தால் வெளியிடப்பட்டன.

19-ஆம் நூற்றாண்டிலே வார இதழ்களும் திங்கள் இதழ்களும் வெளிவந்தபடியால், இவற்றின் மூலமாகவும் வசனநடை வளர்ச்சி பெற்றது. அன்றியும், கிறிஸ்து சமயத்தவர்களைப் பின்பற்றி இந்துக்க ளான சைவ வைணவர்களும், முஸ்லிம்களும் தமது மத நூல்களை வசனமாக எழுதி வெளியிட்டார்கள், கதைகளும், நாவல்களும், சாத்திர நூல்களும் வசன நடையில் வெளிவந்தன. இவ்வாறு சென்ற நூற்றாண்டில் தமிழ் உரை நடைநூல்கள் வளர்ச்சியடைந்தன.

"