உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

177

இவர் தமிழில் எழுதிய நூல்கள்: நற்கருணைத் தியானமாலை (1853) தாமரைக் தடாகம் (1871). ஞானஸ்நானம், நற்கருணை என்னும் பொருள்களைப் பற்றித் தமிழில் நீண்ட கட்டுரைகள் எழுதி யிருக்கிறார். இக்கட்டுரைகள், என்ரி பவர் ஐயர் 1841-இல் எழுதி அச்சிட்ட, “வேத அகராதி” என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கால்ட்வெல் ஐயர் சமயச் சார்பாகச் சில துண்டுப் பிரசுரங்களையும் தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876)

இவர் தம் தந்தையாராகிய சிதம்பரம் பிள்ளையிடத்தில் இளமையில் கல்வி பயின்றார். பின்னர்த் திரிசிரபுரத்தில் இருந்த வேலாயுத முனிவரிடம் கல்வி கற்றார். அப்போது இவருடன் கல்வி பயின்றவர் திரிசிரபுரம் வித்துவான் கோவிந்தப்பிள்ளையவர்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சென்னையில் இருந்தபோது மகா வித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தில் தமிழ் பயின்றார். அப்போது இவருடன் இருந்து தமிழ் பயின்றவர் புரசை அஷ்டா வதானம் சபாபதி முதலியாரும். தாண்டவராயத் தம்பிரானும் ஆவர்.

சென்னையில் இருந்த திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை, எழும்பூர் திருவேங்கடாசல முதலியாரிடத்திலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கல்வி பயின்றார். சென்னையில் இருந்தபோது மகா வித்வான்களாகிய இராமாநுசக் கவிராயர், அவர் மாணவர்களாகிய திருத்தணிகை விசாகப்பெருமாளையர், சரவணப்பெருமாளையர் இவர்களின் மாணவராகிய மழவை மகாலிங்கையர் முதலியவர் களிடம் பிள்ளையவர்கள் பழகினார்கள்.

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் திரு வாடுதுறை ஆதீன வித்துவானாக விளங்கினார்கள். இவர்களிடம் தமிழ்பயின்ற மாணவர் பற்பலர். அவர்களில் முக்கியமானவர் சோடசாவதானம் சுப்பராய செட்டியார், பூவாளுர் தியாகராய செட்டியார் திருவீழி மிழலைச் சாமிநாதக் கவிராயர், வல்லூர் தேவராசப்பிள்ளை, புதுச்சேரி சவரிராயலு நாயகர், முனிசீபு வேதநாகயம் பிள்ளை, வெண்பாப்புலி வேலுச்சாமிப் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் முதலியோர்.