உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

எனவே, கீழ்க்கணக்கு நூல்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும் கடைச்சங்க காலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) தொகுக்கப்பட்டிருத்தல் முடியாது. ஆனால், இன்னிலை பதிப்பாசிரியர், கடைச்சங்கப் புலவரான மதுரை யாசிரியர் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்ததாக இன்னிலை ஏட்டுச்சுவடி கூறுகிறதென்று எழுதுகிறார். இதனைப் பகுத்தறிவுள்ளார் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?

66

“நெடுவெண் பாட்டே முந்நான்கடித்தே

குறுவெண் பாட்டிற் களவெழு சீரே.

என்னும் தொல்காப்பியச் சூத்திர (செய்யுளியல் 159.) உரையில் பேராசிரியர் எழுதிய விளக்கம் இங்குக் கருதத்தக்கது:

66

"இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாத னோக்கிப் பதினெண் கீழ்க் கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடியி னேறாமற் செய்யுள் செய்தார் பிற்சான்ருேருமெனக் கொள்க." என்று பேராசிரியர் எழுதுகிறார். கீழ்க்கணக்கு நூலாசிரியர்களைப் பிற்சான்றோர் என்று அவர் கூறுவது நோக்குக. பிற்சான்றோர் என்றால், கடைச் சங்க காலத்திற்குப்பின் இருந்த சான்றோர் என்பது பொருள். எனவே பிற்காலத்துச் சான்றோர் இயற்றிய நூல்களை முற்காலத்துச் சான்றோர் ஒருவர் தொகுத்தார் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? எனவே, இன்னிலை ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிற, கீழ்க் கணக்கு நூல்களை மதுரையாசிரியர் என்னும் கடைச் சங்க காலத்துப் புலவர் தொகுத்தார் என்னும் கூற்றுப் போலிக் கூற்றாமென் றறிக.

அடுத்தபடியாக, இன்னிலை நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்பது. இதுவும் போலிக் கூற்றாகும். கீழ்க் கணக்கு நூல்கள் சிலவற்றிற்கு அந்தந்த நூலாசிரியர்களே கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளனர். சில கீழ்க் கணக்கு நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து இல்லை. ஆனால், கீழ்க்கணக்கு நூல்கள் எதற்குமே, பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடவில்லை. இன்னிலை நூலுக்கு மட்டும் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்று கூறப்படுகிறது. இன்னிலை, கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் ஒன்றாக இருந்தால், இதற்கு மட்டும் பாரம் பாடிய பெருந்தேவனார் ஏன் கடவுள் வாழ்த்துப் பாட வேண்டும்? ஏனைய பதினேழு நூல்களுக்கு

6