உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

தாண்டவராய சுவாமிகள் இயற்றிய கைவல்லிய நவநீதம் என்னும் நூலுக்குத் திருத்துருத்தி இந்திரபீடம் கரபாத்திர சுவாமிகள் தீனத்து ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் உரை எழுதி 1889-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். இந்த உரை நூலுக்குச் சாற்றுக்கவி பாடினோர் பெயர் வருமாறு:

சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ்த் தலைமைப் பண்டிதராகிய இயற்றமிழாசிரியர் கோ. இராஜகோபால பிள்ளை, திருமயிலை வித்வான் சண்முகம் பிள்ளை, திரிசிரபுரம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் அ. க. அமிர்தலிங்கம் பிள்ளை, திருவல்லிக்கேணி வேங்கடாசலப் புலவர், சேலஞ் சில்லா வைகீல் அத்துவிதானுபவி அப்பாசுவாமி பிள்ளை, திருமூலர் மரபு சதாசிவப் பிரமயோகியின் மாணாக்கர் தே. சுப்பராய முதலியார், சேலம் கோமளேசுவர முதலியார், ஸ்ரீமத் சுவகீயானந்தப் பிரமயோகீந்திரர் மாணாக்கரும் அத்வைத விவேக சமாஜ ஸ்தாபகருமாகிய மணிமங்கலம் திருவேங்கட முதலியார், மேற்படியார் மாணாக்கராகிய வாயலூர் சபாபதி முதலியார். இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தவர்.

இவ்வாறு பல நூல்களிலிருந்து சாற்றுக் கவி வழங்கியவர் களைக் காட்டலாம். விரிவஞ்சி நிறுத்துகிறோம். இந்தச் சாற்றுக் கவிகளிலிருந்து அந்தந்த நூல் வெளியிட்ட ஆசிரியர்களின் காலத்திலிருந்த புலவர்கள் பெயரையும் அவர்களின் தொழில் ஊர் முதலியவற்றையும் தெரிந்து கொள்கிறோம்.

நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் அல்லது சாற்றுக் கவிகளை அச்சிடும் வழக்கம் சென்ற 19-ஆம் நூற்றாண்டில் இருந்தது. பின்னர் அவ்வழக்கம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தது. பிறகு நின்றுவிட்டது.

சாற்றுக் கவிகளிற் சிவற்றை இங்குத் தருகின்றேன். 19- நூற்றாண்டில் வெளிவந்த நூல்களின் சாற்றுக் கவிகளை யெல்லாம் காட்டினால் அதுவே பெரிய நூலாகிவிடும். ஆகையால் மாதிரிக்காக ஒரு சிலவற்றை மட்டும் தருகிறேன்.