உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

/61

திண்ணைப் பள்ளிகளில் கணக்காயர் ஒருவர்தான் ஆசிரியர். ஆ அவருக்கு உதவியாகச் “சட்டாம்பிள்ளை” என்னும் தலைமாணவர் இருப்பார்.

திண்ணைப் பள்ளிகளில் பிள்ளைகள் நூல்களை மனப்பாடஞ் செய்வார்கள் என்று கூறினேன். வெறும் மனப்பாடந்தான். பொருள் கூறப்படமாட்டா. அச்சியந்திரச் சாலைகளும் அச்சுப் புத்தகங்களும் இல்லாத அக்காலத்தில், புத்தகங்கள் கிடைக்காதபடியால், மாணவர்கள் நூல்களை மனப்பாடம் செய்தார்கள். நூல்களை மனப்பாடஞ் செய்வதுதான் அக்காலத்துத் திண்ணைப் பள்ளிக்கூடங்களின் முதல் நோக்கமாக இருந்தது. எழுத்துக்களைக் கற்றுக்கொள்வதும் செய்யுள் களையும் சூத்திரங்களையும் மனப்பாடம் பண்ணுவதுந்தான் திண்ணைப் பள்ளிப் படிப்பின் நோக்கம்.

அக்காலத்தில் வார விடுமுறை கிடையா. உவா நாட்களில் விடுமுறை உண்டு. அதாவது காருவா என்னும் அமாவாசையிலும், வெள்ளுவா என்னும் பௌர்ணமியிலும் விடுமுறை உண்டு. பள்ளிக் கூட விடுமுறையை “வாவு” என்று கூறினார்கள். “வாவு” என்பது “உவா” என்பதன் திரிபு.

கணக்காயரிடம் பொருள் அறியாமல் செய்யுள் நூல்களை மனப்பாடஞ் செய்த மாணவர், பிறகு தகுந்த புலவரிடஞ் சென்று அவர்களிடம் தாம் மனப்பாடஞ் செய்த நூல்களுக்கு உரை கேட்பர். அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில், ஏட்டுச் சுவடிகளும் கிடைப்பது அருமையாக இருந்த காலத்தில், இந்த முறை ஏற்றதாக இருந்தது. மாணவர் உருப்போட்டு மனப்பாடஞ் செய்த ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி, சதகம், நிகண்டு நன்னூல் முதலியவற்றிற்குப் பொருள் கேட்டுக் கற்பர்.

"

திண்ணைப் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுகிற மாணவர் களும் இருந்தனர். அவர்கள் கிளிப்பிள்ளை போல மனப்பாடஞ் செய்த செய்யுட்களுக்குப் பொருள் அறியார். அவர்கள் படிப்பு வீண் படிப்பே. அப்படிப் பட்டவர்களில் சிலர், தாங்கள் பொருள் அறியாமல் மனப்பாடஞ் செய்த செய்யுட்களையும் சூத்திரங்களையும் பிறரிடஞ் சொல்லித் தாங்கள் கல்வியுடையவர் என்று பெருமிதங் கொள்வர். இவர்களைப் பற்றி நாலடியார் இவ்வாறு கூறுகிறது: