உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

43

பனையேடுகளும், இருப்பெழுத்தாணியுந் தவிர, வேறு எழுது கருவிகள் அக்காலத்தில் இருந்ததில்லை. பனையேடுகளில் எழுத்தாணியால் எழுதுவது, காகிதத்திற் பேனாவினால் எழுதுவது போல் எளிதான காரியமன்று; மிகக் கடினமான காரியம். ஆகையால், பண்டைத்தமிழர் எழுத்து வேலையை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவும் குறைக்க வேண்டியவர்களாயிருந்தார்கள். ஆகவே, 'சுருங்கச் சொல்லல்’ என்னும் முறையைக் கைக்கொள்ள வேண்டியிருந்தது. உரை நடையில் நூல் இயற்றுவது எழுத்து வேலையைக் குறைப்பதாகாது; நேர்மாறாக அவ் வேலையை மிகுதிப் படுத்துவதாகும். அதனால் தான் சுருக்கமாகச் சொல்லுவதற்கேற்ற செய்யுள்நடையை நம் பண்டையோர் மேற்கொண்டார்கள் போலும். இன்னொரு காரணமும் உண்டு. அஃதென்னவென்றால், அக்காலத்தில் அச்சுப் பொறியும் அதன் பயனாகிய அச்சுப்புத்தகமும் இல்லாத படியால், நூல்களைக் கற்கும் மாணவர் தாம் கற்கும் எல்லா நூல்களையும் மனப்பாடஞ் செய்யவேண்டி யிருந்ததோடு, நூல்களைப் பாடஞ் சொல்லும் ஆசிரியர்களும் தாம் போதிக்கும் நூல்களை மனப்பாடஞ் செய்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. மனப்பாடம் பண்ணுவதற்கு உரைநடை ஏற்றதன்று; செய்யுள் நடைதான் சிறந்தது. இக்காரணத் தினாலும், பண்டைத் தமிழர் நூல் இயற்றுவதற்குச் செய்யுள் நடையை மேற்கொண்டு, உரை நடையைக் கைவிட்டனர் என்று நினைக்க இடமுண்டாகிறது.

இக்காலத்துள்ளது போல அக்காலத்தில் எளிதாக எழுதுவதற் கேற்ற எழுதுகருவிகளும் பொருள்களும் இல்லாத படியினாலே, எழுத்து வேலையைச் சுருக்கிக் கொள்வதற்காகப் பண்டையா சிரியர் செய்யுள் நடையை மேற்கொண்டனர் என்று சொன்னோம். இக்காரணம் பற்றியே உரையாசிரியர் கூட சில இடங்களில், “இதனை வல்லார்வாய்க் கேட்டுணர்க" என்று எழுதிப் போந்தனர் என்று நினைக்கிறோம். குறிப்புரை, அரும்பதவுரை போன்ற சுருக்க மான உரைகளைப் பண்டையோர் எழுதத் துணிந்ததற்குக் காரணமும் எழுதுகருவி துணைப்பொருள்கள் இல்லாக் குறையென்றே தோன்றுகிறது. தமிழன்னையின் முடிமணியாக விளங்கும் சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய ஆசிரியர் அடியார்க்குநல்லார், மேற்படி நூற்பதிகத்தின் முதல் இரண்டடிகளுக்கு மட்டும் மிக விரிவான உரை எழுதிய பின்னர், "இனிப் பதிகச் செய்யுளுள், முதலீரடியும் போல யாண்டும் விரியாதது