உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

இந்நூலில் மரஞ்செடிகளின் பெயர்களை மட்டும் குறிப்பிடும் தமிழ் அச்செழுத்து அந்நகரத்தில் உண்டாக்கப் பட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு ஜெர்மனி தேசத்தைச் சேர்ந்த ஹாலி நகரத்தில்,1780- ஆம் ஆண்டில், (தஞ்சைத் தரங்கம்பாடியில் இருந்த சீகன்பால்கு ஐயர் என்னும் டேனிஷ் மிஷன் தலைவரின் வேண்டுகோளின்படி) தமிழ் அச்செழுத்துக்கள் உண்டாக்கப்பட்டன. பிறகு, அந்த நகரத்திற் சில தமிழ்ப் புத்தகங்கள் அச்சிற் பதிக்கப்பட்டனவாகத் தெரிகின்றன. ஷூல்ஸ் ஐயர் என்னும் செர்மானியர் "பரதீஸ் தோட்டம்”4 என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்து 1749-இல் அச்சிற் பதிப்பித்தார். "உண்மைக் கிறித்துவம்”5 என்னும் புத்தகத்தை “ஞானக் கண்ணாடி என்னும் பெயருடன் தமிழில் மொழிபெயர்த்தெழுதி 1750-இல் அச்சிட்டார். இப் புத்தகங்கள் ஹாலி நகரத்தில் அச்சிடப்பட்டன. (ஷூல்ஸ் ஐயர் தஞ்சைக்கடுத்த தரங்கம்பாடியில் வந்து தமிழ் கற்ற பாதிரியாவர்.) இன்னும் சில தமிழ்ப் புத்தகங்கள் செர்மனி தேசத்தில் 18-ஆம் நூற்றாண்டில் அச்சிடப் பட்டிருக்கின்றன. அவற்றைப்பற்றிய செய்திகள் இப்போது எமக்குக் கிடைக்க வில்லையாகையால், அவற்றின் வரலாற்றை எழுத இயலவில்லை. செர்மனி தேசத்தில் தமிழ்ப்புத்தகங்கள் அச்சிடப்பட்ட அதே காலத்திலோ, அதற்குச் சற்று முன் பின்னாகவோ, இத்தாலி தேசத்தைச் சேர்ந்த உரோமா புரியிலும் தமிழ்ப் புத்தகங்கள் அச்சிடப்பட்டனவாகத் தெரிகின்றன. கிழக்குத் தேசங்களில், கிறித்துவ மதத்தைப் பரவச்செய்யும் பொருட்டு, கீழ்நாட்டு மொழிகளிற் கிறித்துவ மத நூல்களை அச்சிடுவதற்காக அச்சுப்பொறி நிலையம் உரோமா புரியில் அமைக்கப்பட்டிருந்த செய்தி ஐரோப்பியர் எழுதியுள்ள பழைய நூல்களினால் வெளிப்படுகிறது. அந்த அச்சுப் பொறி நிலையத்தில் இந்திய மொழிகளிற் சில நூல்கள் அச்சிடப் பட்டனவாகத் தெரிகின்றன. ஆனால் அங்கு அச்சிடப்பட்ட தமிழ்ப்புத்த கங்களைப்பற்றிய செய்திகள் இப்போது அறியக் கூடாமலிருக்கின்றன.

இனி, நமது நாட்டில் முதன் முதல் அச்சுப் புத்தகம் வந்த வரலாற்றினை ஆராய்வோம். இந்தியாவிலே, அதிலும் தமிழ் மொழியில், முதன் முதல் அச்சுப் புத்தகம் உண்டாக்கிய பெருமை ஏசுவின் சபைப் பாதிரிமாரைச் சேர்ந்தது என்று மேலே சொன் னோம். தமிழ் அச்சுப் புத்தகவரலாற்றைப்பற்றித் திட்டமாகக் கூறும் நூல் ஒன்றேனும் இல்லை. ஆகையால், ஆங்காங்குச் சிதறிக்கிடக்கும் செய்திகளிலிருந்தும் குறிப்புகளிலிருந்தும் இவ்வரலாறு ஒருவாறு எழுதப்படுகிறது.