உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

111

என்பது ஐங்குறுநூறு (முல்லை, புறவணி பத்து, 7). இவற்றிலிருந்து ஆல் என்னும் சொல்லிலிருந்து ஆலி என்னும் சொல் தோன்றித் திராவிட இனமொழிகளில் வழங்கிவருவதைக் காண்கிறோம்.

இக்காலத்தில் விஞ்ஞான முறைப்படி, தண்ணீரை உறையச் செய்து அந்தக் கட்டிகளுக்கு ஐஸ் என்று பெயர் கொடுத்துக் கடைகளில் விற்கிறார்கள். இந்த நீர்க்கட்டியைப் பனிக்கட்டி என்று தமிழில் பெயர் வழங்குகிறோம். தூய தமிழ்ச் சொற்களைப் பயின்று வருகிற நாட்டுக் கோட்டை நகரத்துச் செட்டியார்கள் பனிக்கட்டியைக் குளிர்ச்சிக் கட்டி என்று கூறுவர். பனிக்கட்டி என்றும் குளிர்ச்சிக் கட்டி என்றும் கூறுவதைவிட, நீர்க்கட்டி என்னும் பொருளுடைய ஆலிக்கட்டி என்று கூறுவது மிகப் பொருத்தமாயிருக்கும் அல்லவா?

ஆல் (நீர்) என்னும் சொல்லிலிருந்து இடப்பெயர்கள் சில தோன்றியுள்ளன. ஆலந்துறை (ஆலந்துறைக் கட்டளை), ஆலம் பாக்கம் என்னும் ஊர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளன. இப் பெயர்கள் ஆலமரத்துடன் தொடர்புடைய பெயர்கள் என்று நினைக்கும்படி இருக்கிறது இக்காலத்தில். ஏனென்றால், ஆல் அல்லது ஆலம் என்பதற்கு ஆலமரம் என்னும் பொருள்தான் நமது மனத்திலே தோன்றுகிறது. ஆனால் நீர்நிலையை யடுத்துள்ள ஊர்களின் பெயர்கள் வை என்பதை மறந்துவிட்டோம். சற்றுக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் ஆலந்துறையும் ஆலம்பாக்கமும் நீர் நிலைகளுக்கு அருகில் அமைந்த ஊர்களின் பெயர்கள் என்பது நன்கு விளங்கும். (ஆலந்துறை நீர்த்துறைக்கு அருகில் உள்ள ஊர். ஆலம்பட்டி நீர் நிலைக்கு அருகில் உள்ள பட்டி - கிராமம்.)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் ஆலங் கிணறு என்னும் ஊர்ப் பெயர்கள் ஆலமரத்துடன் தொடர்புடையவை என்று மேலோட்டமாகப் பார்ப்பவருக்குத் தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து யோசித்து, ஆலம் என்பதற்கு நீர் என்னும் பொருள் உண்டு என்பதை நினைவுபடுத்திக்கொண்டு பார்ப்போமானால் ஆலங் குளமும், ஆலங்கிணறும் நீரின் (ஆலம் = நீர்) தொடர்புடைய பெயர்கள் என்பது நன்கு விளங்கும். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஆலந் தாங்கல் என்னும் ஊர் உண்மையில் நீரின் தொடர்புடைய பெயரே. (ஆலம் = நீர். தாங்கல் = சிறு ஏரி) நீர்த்தாங்கலுக்கு அருகில் உள்ள ஊர் லந்தாங்கல் என்று பெயர்பெற்றது.