உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

125

பாக்கை வெட்டும் கத்தி அல்லது கத்தரிக்குக் கன்னட மொழியில் அடகொத்து, அடகத்தி, அடகர்த்தி என்றும், தெலுங்கு மொழியில் அடகத்து, அடகொத்து, அட்டகத்தரெ, அடகத்தி என்றும் பெயர்கள் வழங்குகின்றன. இச்சொற்கள் அடைக்காய்க்கத்தி, அடைக்காய்க் கர்த்தரி என்னும் சொற்களின் திரிபுகள்.

ஒரு நாளில் பல முறை வெற்றிலைப் பாக்கு அருந்தும் வழக்கம் நமது நாட்டில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. முக்கியமாக உணவு அருந்திய பிறகு வெற்றிலை யுண்ணும் வழக்கம் உண்டு. திருமணம் முதலிய சிறப்புக்களில் வெற்றிலைப் பாக்கு வழங்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. வெற்றிலைப் பாக்குப் பெட்டியை அல்லது பையைக் கையிலேயே கொண்டு போகும் பழக்கம் பலருக்கும் உண்டு.

வெற்றிலைப் பாக்கு வைக்கும் பைக்கு அடைப்பை என்பது பெயர். பைக்குப் பதிலாகச் சிறு பெட்டியிலும் வெற்றிலைப் பாக்கை வைத்துக் கொள்வதும் உண்டு. அப்பெட்டிக்கும் அடைப்பை என்பதே பெயர். 'தமனிய அடைப்பை என்று சிலப்பதிகாரம் (14:128) கூறுகிறது. ‘பொன்னாற் செய்த வெற்றிலைப் பெட்டி' என்று இதன் பழைய உரை கூறுகிறது. அடைப்பை அடப்பம் என்றும் வழங்கப்பட்டது.

அடைப்பை அல்லது அடப்பம் என்னுஞ் சொல் மலையாள மொழியில் அடப்பம், அடப்பன் என்றும், கன்னட மொழியில் அடப, ஹடப என்றும், தெலுங்கு மொழியில் அடபமு, ஹடபமு என்றும் வழங்கப்படுகின்றன.

எஜமாட்டிக்கு அடைப்பை ஏந்தும் ஊழியப் பெண்ணுக்கு அடப்ப, அடப்ப கத்தெ என்றும், எஜமானனுக்கு அடைப்பை ஏந்தும் ஊழியனுக்கு அடப்பகாடு என்றும் தெலுங்கு மொழியில் பெயர்கள் வழங்குகின்றன.

வெற்றிலைப்பாக்கு வைக்கும் பை அல்லது பெட்டிக்கு அடப்பம் (அடைப்பம்) என்று பெயர் வழங்கிய பிறகு, இந்தச் சொல் மயிர் வினைஞராகிய அம்பட்டர் தம்முடைய கருவிகளை வைக்கும் சிறுபெட்டி அல்லது பைக்கும் இப்பெயர் வழங்கப்பட்டது. இ பொருளில் இச்சொல் தமிழில் வழங்குவது போலவே மற்றொரு திராவிட இனமொழியாகிய துளுமொழியிலும் அடப, ஹடப என்று மயிர்விளைஞரின் சிறுபெட்டிக்குப் பெயராக வழங்கப்படுகிறது.