உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

131

இதிலும் ஊழியப்பெண் கூனி என்று கூறப்பட்டது காண்க. ஊழியப் பெண்ணாகிய கூனியைப் பெருங்கதை நூலாசிரியர் கூன்மகள் என்றும் கூறுகிறார். கூன்மகள் என்றால் கூனி அல்லது ஊழியப்பெண் என்பது பொருள்.

'ஆய்ந்த கோலத் தயிரா பதியெனும் கூன்மட மகளைக் கோமகன் குறுகி”

(பெருங்கதை, மகதகாண்டம். 6: 99-100)

'சேயிழைக் கூன்மகள் சென்றனள்.'

(பெருங்கதை. மகத. 6: 200)

கூன் இல்லாத, உறுப்பிற் குறைபாடில்லாத ஊழியப் பெண்களும் கூனி என்றும் கூன்மகள் என்றும் கூறப்பட்டுள்ளனர். மாதவியின் பணிப் பெண்ணாகிய வசந்தமாலை முதுகுக் கூனுடைய கூனியல்லள். அங்கவீனமில்லாத அழகி. மதுராபதி என்னும் அரச குமாரியின் பணிப்பெண்ணாகிய அயிராபதி என்பவளும் அங்கவீனம் இல்லாத நல்லுடம்பு பெற்ற அழகி. இவர்கள் கூனி என்று கூறப்பட்டுள்ளனர். வளைந்த முதுகுள்ள பெண் என்னும் பொருளுள்ள கூனி என்னுஞ் சொல், அழகான உடம்புள்ள, கூன் அல்லாத ஊழியப் பெண்களுக்குப் பெயராகக் கூனி என்று ஏன் வழங்கப்பட்டது? இதன் காரணம் என்ன?

கூனி என்னுஞ் சொல்லுக்கு ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு காரணமாகத்தான் கூன் முதுகுள்ளவள் என்னும் பொருளுள்ள கூனி என்னுஞ் சொல், கூன் முதுகில்லாத நல்ல அழகான உ உடலமைப்புள்ள ஊழியப் பெண்களுக்கும் கூனி என்னும் பெயர் வழங்கி வந்தது. இக்காலத்து இச்சொல் இப்பொருளில் (ஊழியப்பெண்) 6 வழக்கிழந்து விட்டது. கூனி என்னுஞ் சொல்லின் வரலாற்றை ஆராய்வோம்.

பழங்காலத்தில்

சங்க காலத்திலும் அதனை அடுத்த காலத்திலும், அரசர்களும் பிரபுக்களும் தங்கள் அரண்மனைகளிலும் மாளிகைகளிலும் கூனர் குறளர் ஊமர் முதலிய அங்கவீன முடையவர்களை ஊழியர்களாக ஏற்படுத்தியிருந்தனர். தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் அக்காலத்துப் பாரததேசம் முழுவதும் இந்த வழக்கம் இருந்தது. வடநாட்டு அரசர்களும் தமிழ் நாட்டரசர்களைப் போலவே, தங்கள் அரண்மனைகளில் குறளர், கூனர் முதலிய அங்கவீனர்களை