உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை நகரம் யாருக்கு உரியது?*

('சென்னை யாருக்குச் சொந்தம்' என்று கேட்கின்றனர் பலர். 'எமக்குச் சொந்தம்' என்று சில ஆந்திரர் கூறுகின்றனர். அது தவறு என்று காட்டுவது இக்கட்டுரை.)

சென்னை மாநகரம் தொண்டை நாட்டில் உள்ளது. இந் நகரம் ஏற்பட்டுச் சுமார் 300 ஆண்டுகள் ஆகின்றன. இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்றான புலியூர்க் கோட்டத்தில் சென்னை நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தைத் தெலுங்கர்களில் சிலர், தங்களுடையது என்று வரலாறு உணராமல், விபரம் அறியாமல் கூறுவது பொருத்தமற்ற, உண்மைக்கு மாறான செய்தியாகும்.

விசயநகர அரசு, முகம்மதியரால் தோல்வியுற்றுச் சிதைந்து போயிற்று. சிதைந்துபோன விசயநகர அரசன் வழிவந்தவன் சந்திரகிரி அரசன், அக்காலத்தில் (17-ஆம் நூற்றாண்டில்) நாடெங்கும் கொள்ளையும் குழப்பமுமாக இருந்தபடியால், எந்தெந்த நாடு யார் யாருக்குரியதென்று சொல்ல முடியாமல், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்னும் நிலையில் இருந்தது. அந்தக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த டே என்னும் ஆங்கிலேயர் 1639-இல் சந்திரகிரி அரசனிடமிருந்து சென்னையில் கோட்டையுள்ள இடத்தை மாத்திரம் வாடகைக்கு வாங்கினார். அக்காலத்தில், சென்னை சந்திரகிரி அரசனுக்குச் சொந்தம் என்றே வைத்துக்கொண்டாலும், பிற்காலத்தில் அது வேற்றரசருக்கு உரியதாயிற்று என்னும் செய்தியை வரலாறு கூறுகிறது.

1646-இல் சந்திரகிரி அரசன், முகம்மதியரால் தாக்கப்பட்டுச் சந்திர கிரியை விட்டு மைசூருக்கு ஓடி ஒளிந்தான். அவனுடைய அரசும், நாடும் முகம்மதியரால் பிடிக்கப்பட்டு முகம்மதியரின் ஆட்சிக்கு வந்து விட்டன. அதாவது, கோல்கொண்டா அரசன் சந்திரகிரி அரசனைத் துரத்திவிட்டுச் சந்திரகிரி இராச்சியத்தைச் சென்னையுட்படப் பிடித்துக் கொண்டான். ஆகவே, 1670-இல், கிழக்கிந்தியக் கம்பெனியார் தங்கள் செயின்ட் சார்ச் கோட்டையையும், சென்னை நகரத்தையும் கோல் கொண்டா அரசனிடம் இருந்து மீண்டும் வாடகைக்குப் பெற்றனர். இந்த *செந்தமிழ்ச்செல்வி, 23:2,1948.