உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

இத் திருத்தாண்டகத்திலே, முலை மறைக்கப்பட்ட நீராடாப் பெண்கள் (அதாவது சமண சமயத்துப் பெண் துறவிகளாகிய ஆரியாங்கனைகள்) சமண முனிவரை எம் தெய்வம் என்று கூறி வணங்கினார்கள் என்று அப்பர்சுவாமிகள் கூறுகிறார். இங்குக் கடவுள் (முனிவர்) என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்கியிருப்பது காண்க.

திருவள்ளுவரும், தாம் அருளிய திருக்குறளிலே முனிவர் (துறவி) என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்கியிருக்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

என்பது அந்தக் திருக்குறள்.

இக்குறளில் தெய்வம் என்னும் சொல்லுக்குக் கடவுள் (முனிவர், துறவி) என்னும் பொருள் உள்ளது காண்க. இல்லறத்தில் உள்ளவன் ஐந்துவகைப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்று இத்திருக்குறள் கூறுகிறது. அந்த ஐந்துவகைப்பட்ட மனிதர் யாவர்? இல்லறத்தால் தன்னையும், தன் குடும்பத்தினரையும், விருந்தினரையும், தெய்வம் (கடவுள்) எனப்படும் துறவிகளையும் தென்புலத்தாரையும் உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

இக்குறளில் வரும் தெய்வம் என்னும் சொல்லுக்குத் தேவர் என்று சிலர் பொருள் கூறுகிறார்கள். அப்படியானால் தேவர்களாகிய தெய்வங்களை இல்லறத்தான் எவ்வாறு காப்பாற்ற முடியும்? தேவர்களோ கண்ணுக்குப் புலப்படாதவர்கள். அன்றியும், அமிர்தத்தை உணவாகக் கொண்டவர்கள். மனிதன் தேவர்களுக்கு எப்படி அமிர்தம் கொடுக்க முடியும்? இயலாத காரியமாயிற்றே! மேலும், தேவர்கள் தமது ணவுக்கு மனிதர்களையா எதிர்பார்த்திருக்கிறார்கள்! அறிவுக்குப் பொருந்தவில்லையே! எனவே, இக்குறளில் தெய்வம் என்று கூறப்பட்டவர் துறவிகள், முனிவர்கள் கடவுளர்கள் ஆவர்.

துறவிகளாகிய கடவுளர் மனிதர் உண்ணும் உணவை அருந்தி உயிர் வாழவேண்டியவர்கள். அன்றியும் இல்லறத்தானையே தமது உணவுக்கு எதிர்பார்த்திருப்பவர்கள். எனவே, தெய்வம் என்று கூறப்பட்டவர், உலகத்திலே இருந்து உணவு கொண்டு உயிர் வாழ்கிற முனிவர்கள், துறவிகள் ஆவர். இதில் சற்றும் ஐயமில்லை. எனவே,