உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

கொற்கைக் கடலிலே முத்து உண்டானது போலவே அக்காலத்தில் சேரநாட்டு முசிறித் துறை முகத்திலே முத்து உண்டாயிற்று. அந்த முத்தைத் தான் கவுடல்லியரின் அர்த்த சாஸ்திரம் கௌர்ணேயம் என்று கூறுகிறது.

கவுடல்லியரின் அர்த்தசாஸ்திரத்துக்குத் தமிழ்-மலையாள உரை எழுதிய ஒருவர் இதைப்பற்றித் தமது உரையில் விளக்குகிறார். இந்த உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. இந்த உரையாசிரியர், தமிழ் மொழியிலிருந்து மலையாள மொழி தோன்றிக்கொண்டிருந்த பிற் காலத்திலே இருந்தவர் ஆகவே, இவருடைய உரையில் தமிழ்ச் சொற்களும் மலையாளச்சொற்களும் கலந்துள்ளன. இந்த உரை யாசிரியர் கௌர்ணேயம் என்னும் சொல்லின் பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

‘கௌர்ணேய மாவிது மலநாட்டில் முரசி ஆகின்ற பட்டினத் தினருகே சூர்ண்ணி யாற்றிலுளவா மவு’ இதைத் தமிழிலே சொல்ல வேண்டுமானால், 'கௌர்ணேயம் ஆவது மலை நாட்டில் முரசி ஆகிய பட்டினத்தின் அருகே சூர்ணி ஆற்றில் உண்டாவது’ என்று கூறவேண்டும்.

இந்த உரையில் முரசி பட்டினமும் சூர்ணி யாறும் கூறப் படுகின்றன. முரசி என்பது முசிறி. புறநானூறு முதலிய சங்க நூல்களிலே கூறப்படுகிற முசிறிப் பட்டினம் இதுவே. யவன வாணிகர் மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த துறைமுகங்களில் முசிறியும் ஒன்று. யவனராகிய கிரேக்கர் முசிறியை முசிறிஸ் (Muziris) என்று கூறினர். வடமொழியாளர் முசிறியை முரசி என்றும் மரிசி என்றும் கூறினார்கள்.

சூர்ணியாறு என்பது பெரியாறு. பெரியாற்றைச் சங்க நூல்கள் பேரியாறு என்று கூறுகின்றன. பெரியாற்றை வடமொழியாளர் சூர்ணிகா என்று கூறினர். பெரியாறாகிய பேரியாற்றங் கரையிலே மரச் சோலையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கியிருந்து இயற்கைக் காட்சிகளைக் கண்ட செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. நெடியோன் மார்பில் ஆரம் போன்று

பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை இடுமணல் எக்கர் இயைந் தொருங் கிருப்ப.

என்பது சிலப்பதிகாரம். (காட்சிக்காதை. 21-23)