உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

95

நீர்விளையாட்டு ஆடிய பிறகு, மகளிர் பலவித ஆடைகளை அணிந்து கொண்டார்களாம். அந்த ஆடைகளைக் கூறுகிறார் கொங்குவேள்.

பைங்கூன் பாதிரிப் போதுவிரித் தன்ன அங்கோ சிகமும் வங்கச் சாதரும்

கொங்கார் கோங்கின் கொய்ம்மலர் அன்ன பைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும் நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும் கோலமொடு புணர்ந்த வேறுவேறு இயற்கை நூலினும் உலண்டினும் நாரினும் இயன்றன யாவை யாவை யவையவை மற்றவை மேவன மேவன் காமுற வணிந்து

3

(அங்கோசிகம் - அழகிய பட்டாடை. வங்கச் சாதர் - வங்கநாட்டுச் சாதர் என்னும் ஆடை. பைங்கேழ்க் கலிங்கம் பசிய நிறமுள்ள கலிங்க ஆடை. பட்டுத் தூசு - பட்டாடை. நீலம் - நீலநிற ஆடை. அரத்தம் - - சிவந்த நிற ஆடை. வாலிழை வட்டம் - வெண்மையான நூலாடை.)

இவற்றில் கலிங்க ஆடையையும் கூறுவது காண்க.

மேலும், கஞ்சி தோய்த்த புதிய ஆடையை, காடி கலந்த கோடிக் கலிங்கம் என்றும், காவி தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்தவன் என்பதைக் கல்லூண் கலிங்கங் கட்டிய அரையினன் என்றும், கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர் என்றும்,

நுரைவிரித் தன்ன நுண்ணூற் கலிங்கம் அரைவிரித் தசைத்த அம்பூங் கச்சு

என்றும் பெருங்கதையாசிரியர் கூறுகிறார்.

கலிங்க நாட்டிலிருந்து வந்த ஆடைகளுக்குக் கலிங்கம் என்னும் பெயர் வழங்கப்பட்டு, அந்தப் பெயர் பிற்காலத்தில் - ஆடைகளுக்குப் பொதுப் பெயராக மாறிற்று என்பது தெரிகிறது.

இங்கு ஒன்றை நினைவிலிருத்த வேண்டும். இடப்பெயர் பொருட்பெயராக மாறுவது ஒரே நாட்டிலல்ல. ஒரு நாட்டு இடப்பெயர் மற்றொரு நாட்டிலேதான் பொருட்பெயராக மாறுகின்றது. சைரியா தேசத்துத் துறைமுகப்பட்டினமாகிய பீப்லாஸ் என்னும் பெயர், கிரேக்க