உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

105

(சந்தியா தாண்டவமூர்த்தி அல்லது கௌரி தாண்டவமூர்த்தி என்று பெயர் பெறவேண்டிய இந்தச் சிற்பத்துக்குக் காட்சிச்சாலை உத்தியோகஸ்தர், 'நடேசர்' என்று பெயர் கொடுத்திருக்கிறார். நடேசர் என்பதும், நடராஜர் என்பதும் தாண்டவ மூர்த்தங்களுக்குப் பொதுப் பெயர். இச்சிற்ப உருவத்துக்குக் கௌரி தாண்டவமூர்த்தி என்று சரியான பெயர் கொடுக்காத காரணம் யாதோ தெரியவில்லை)

பொருட் செல்வம், கல்விச் செல்வம், மக்கட் செல்வம் ஆகிய பேறுகளை அளிப்பது இந்தத் தாண்டவ தரிசனத்தின் பயன் என்று தெரிகிறது. புரட்டாசித் திங்களில் முழுநிலா நாளில் சிவபெருமானை முறைப்படி பூசைசெய்து வணங்கி, புஜங்கத்திராசம் என்னும் இத் தாண்டவத்தைத் தரிசித்தால் தனப்ராப்தம் (செல்வப்பேறு) கிடைக்கும் என்று காரணாகமம் கூறுகிறது.

சு

இச்சிற்ப உருவத்தின் கலையழகைக் காண்போம். இதனுடன் சேர்ந்து இருக்க வேண்டிய சில பகுதிகள் காணப்படாமல் சிதைந்துள்ள நிலையிலும், இச்சிற்பத்தில் இத்தாண்டவத்திற்குரிய பொருளமைதியும் கலையழகும் நிரம்பியிருக்கின்றன.

முயலகனைப் பாருங்கள், எதிர்புறமாகத் தரையில் விழுந்து கிடக்கிறான். தாண்டவப் பெருமானுடைய பாதநிலை, படைத்தல் செயலாகிய காளிகா தாண்டவத்தில், முயலகன் நிமிர்ந்து உட்கார்ந் திருக்கிற நிலைக்கு அடுத்தநிலையாக இருக்கிறது. அந்தக் காளிகா தாண்டவ உருவத்தில் உள்ள திருவடி நிலையுடனும் முயலகன் இருப்புடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், இது நன்கு விளங்கும். அந்தத் தாண்டவத்தில் முயலகன் நிமிர்ந்து உட்கார்ந்து, அழுந்த மிதிபடாமல் இருக்கிறான். இந்தக் கௌரி தாண்டவத்திலோ, முயலகன் மிதியுண்டு குப்புற விழுந்து கிடக்கிறான்; ஆனந்ததாண்டவத்தில் உள்ளது போன்று, முயலகன், நடராசப் பெருமானின் வலப்புறம் தலையும் இடப்புறம் காலுமாகக் கிடக்காமல் எதிர்ப்புறமாக விழுந்து கிடக்கிறான்.

தாண்டவமூர்த்தியின் இடதுகால் குஞ்சிதபாதமாகச் சிறிது தூக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முந்திய தாண்டவத்தைவிடச் சற்று உயரமாகத் தூக்கியிருக்கிறது. தூக்கிய திருவடிகளுக்கு ஏற்ப வீசிய கரம் அமைந்திருப்பது பொருத்தமாகவும் அழகாகவும் காணப்படுகிறது. இடது கை ஒன்றில் பாம்பு இருக்கிறது. பாம்பின் உருவம் இச்சிற்பத்தில் உடைந்துபோய்விட்டபடியால், முழு உருவமாகக் காணப்படவில்லை.