உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு - 3 முயலகன்

முயலகன் உருவத்தைப் பற்றி ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். பிற்காலத்தில் எழுதப்பட்ட நடராசர் ஓவியங்களிலும் சிற்ப உருவங்களிலும் அவருடைய காலின் கீழேயுள்ள முயலகன் உருவத்தைத் தவறாக அமைத்திருக்கிறார்கள். முயலகன் ஒரு கையில் வாளையும் இன்னொரு கையில் கேடயத்தையும் ஏந்தியிருப்பது போலப் பிற்கால ஓவியங்களிலும் சிற்பங்களிலும் அமைத்திருக் கிறார்கள். இது, முயலகன் சிவபெருமானுடன் போர் செய்ய வந்தான் எனக் கூறுகிற புராணக் கதைக்குப் பொருத்தமாக இருந்தாலும், சாத்திரக் கருத்துக்கு மாறுபட்டதாக இருக்கிறது.

தத்துவ சாத்திரக் கருத்துப்படி, முயலகன் ஒரு கையில் படம் எடுத்து ஆடுகிற சிறிய பாம்பைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கை விரலினால் அப்பாம்பைச் சுட்டிக்காட்டுவது போல உருவம் அமைக்கப்பட வேண்டும். இந்த அமைப்புப்படிதான் பழைய சிற்பிகள் முயலகன் உருவத்தை அமைத்திருக்கிறார்கள். பழைய நடராச சிற்ப உருவங்களில் முயலகன் வாளும் கேடயமும் எந்தியிருப்பது போன்ற அமைப்பைக் காணமுடியாது. பாசத்துடன் சேர்ந்து துன்பப்படுகிற ஆன்மாவைக் குறிப்பது முயலகன் உருவம். ஆகையால், அவன் கையில் படமெடுத்த பாம்பின் உருவம் அமைக்கப்பட வேண்டும் என்பது சாத்திரக் கருத்து. வாளும் கேடயமும் ஏந்தியிருப்பது போன்று முயலகன் உருவத்தை அமைப்பது சாத்திரக் கருத்தை அறியாத சிற்பிகளின் கற்பனையாகும் (படம் 9 பஞ்சேசுவரர் கோவில் சிற்பம் காண்க.)