உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

முதலியவற்றைச் சேர்த்துக் கொண்டால் தீமை ஒன்றும்வராது. மாமிச உணவு உண்ணாத, மரக்கரி உணவு மட்டும் உண்கிறவர்கள், கோதுமையை ரொட்டியாகவோ பூரி சப்பாத்தியாகவோ அல்லது வேறு விதமாகவோ சாப்பிட்டால் அதனுடன் நெய் அல்லது வெண்ணெயைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். நெய் வெண்ணெய் சேர்க்காமல் கோதுமையை நெடுங்காலம் உபயோகிப்பவர்களுக்கு மாலைக்கண், கல்லடப்பு என்னும் நோய்கள் உண்டாகும். இக்காரணம் பற்றித்தான் கோதுமையை முக்கிய உணவாகக் கொள்கிறவர்கள் நெய் அல்லது வெண்ணையை உபயோகிக்கிறார்கள். இந்நூலெழுதுபவர், இரவில் கோதுமையை உணவாகக் கொண்டு வருகிறார். நெய் அல்லது வெண்ணெய் சேர்க்காவிட்டால் கண் எரிச்சலும் மலச்சிக்கலும், உண்டாகி உடல் நலம் கெடுவதையும், நல்ல நெய் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் இருப்பதையும் அனுபவ வாயிலாகக் கண்டிருக்கிறார். ஆகவே, கோதுமையை வழக்கமாக உண்ணும் பழக்கம் உள்ளவர் கலப்பில்லாத நல்ல நெய்யைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். நெய் சேர்த்துக் கொள்ளாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே உண்டாகும். நல்ல நெய் கிடைக்காதவர்களுக்கு மீன், முட்டை இறைச்சிகளைச் சேர்த்துக்கொள்வதனால் மேற்படி தீமைகள் உண்டாகாது.

குறிப்பு : மக்கள் முக்கிய உணவாகக் கொள்ளும் தானியங் களைப் பற்றிக் கூறினோம். முக்கியமாக அரிசியும் கோதுமையும் தான் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. ஆனால் கடைகளில் விற்கும் அரிசியும், கோதுமையும் தவிடு போக்கியவைகளாக உள்ளன. தசைகளுக்கு உரமளிக்கிற தவிடு இவற்றில் இல்லை. ஆனால், உடல் நலத்திற்கு அவசியமாக வேண்டப்படுகிற வெப்பம் உண்டாக்குகிற ஸ்டார்ச் என்னும் மாவுப் பொருள் உண்டு. இவற்றில் தானியங்களில் எல்லாம் மாவுப் பொருள்களே முக்கியமாகவுள்ளன. மாவுப் பொருள்களாகிய, அரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை முதலிய உணவுகளை உண்ணும் போது வாயில் சுரக்கும் உமிழ் நீரோடு கலந்து குழப்பி உண்ண வேண்டும். ஏனென்றால், உமிழ் நீருக்கு மாவுப் பொருள்களைச் செரிக்கச் செய்கிற தன்மை உண்டு. ஆகவே, பல்லையும் உமிழ் நீரையும் நன்கு பயன்படுத்தி உடல் நலம்பெறக் கற்றுக்கொள்ள வேண்டும்.