உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

ஆகவே, நெய், வெண்ணெயாகிய மிருகக் கொழுப்புகளை வாங்க வசதி உள்ளவர், கோதுமையைச் சாப்பிட்டு உடல் நலம் பெறலாம். ஆனால், மாமிச உணவு உண்பவர் கோதுமை உணவை உபயோகப்படுத்துவதில் தவறு இல்லை. ஏனென்றால் மாமிசத்தை அவர்கள் சேர்த்துக்கொள்கிறபடியால், மாமிசத்தில் கொழுப்பு இருப்பதனாலே கோதுமை உணவு அவர்களுக்கு நன்மை செய்யுமே தவிர, தீமை செய்யாது. மாமிச உணவு சாப்பிடாதவர்கள், நெய் அல்லது வெண்ணெயாகிய மிருகக் கொழுப்பு சேர்க்காமல் எண்ணெயை மட்டும் உபயோகித்துக் கோதுமையை உண்பது நாளடைவில் உடலுக்குத் தீமை பயக்கும்.

அரிசி உணவை உண்கிற நாம், தவிடு போக்கிய வெண்மையான அரிசியை உண்கிறோம். கார் அரிசி போன்ற சிவந்த நிறமுள்ள சத்துள்ள அரிசியைச் சாப்பிடுவது அநாகரிகம் என்று நினைக்கிறோம். சோறு சமைத்துக் கஞ்சியையும் வடித்து விடுகிறோம். ஆகவே, வெறும் சோற்றில் என்ன இருக்கிறது என்றால், உடம்புக்கு வெப்பம் தருகிற மாவுப்பொருள் தவிர அதில் வேறொன்றுமில்லை.

கஞ்சி வடிக்காமல் அளவாக நீர் வைத்துச் சோறு சமைப்பது நல்லது. கஞ்சி வடித்த சோற்றைவிட, பொங்கலாகச் சமைப்பது சற்று சத்துள்ளது. தோசை, இட்டலி, பொங்கல் சோற்றைவிட சத்து உள்ளவை. ஏனென்றால், கஞ்சி வடிக்காமல் இருப்பதோடு உளுந்து சேர்த்து தோசை இட்டலி செய்கிறோம். உளுந்தில் தசை வளர்க்கிற புரொட்டின் என்னும் பொருளும் பி.விட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் இருக்கிறது. ஆகவே, வெறும் சோற்றை விட தோசை, இட்டலி, அதிக சத்துள்ள உணவுகளாகும். ஆனால் சோடா மாவு கலக்கக்கூடாது.

சோற்றுடன் சாம்பார், குழம்பு, தயிர், மோர் சேர்த்துக் கொள்கிறோம். சாம்பாரும் குழம்பும் பருப்பினால் செய்யப்படுகிற படியால், தசை வளர்க்கும் சத்தும் பி. விட்டமினும் அவற்றில் இருக்கின்றன. ஆகவே, தவிடும் அதிலுள்ள பி. உயிர்சத்தும் தசை வளர்க்கும் சத்தும் போய்விட்ட அரிசிச் சோற்றில் பருப்பையும் சாம்பாரையும் சேர்த்துக் கொள்வதால், இழந்துபோன மேற்படி சத்துக்களைப் பெறுகிறோம். தோசையுடனும் இட்டலியுடனும் சாம்பார் சேர்த்துக் கொள்வது மேலும் பயனுள்ள தாகும். சோற்றில் தயிர் சேர்த்துக் கொள்வதனாலும் சதை வளர்க்கும் சத்து கிடைக்கிறது.