உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளும் அதற்குரிய தொழில் களைச் செய்கின்றன. ஆயினும், சில உறுப்புகள் அதிகமாக உழைத்து வேலை செய்கின்றன. அவ்வுறுப்புகள் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். உடம்புக்கு உள்ளேயிருக்கிற சில உறுப்புகள் மிகுதியாக உழைக்கின்றன. உழைப்புக்கு ஏற்றபடி அவை உரமும் பலமும் உள்ளவைகளாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவை மேன்மேலும் நன்றாக உழைத்து உடம்பை நன்னிலையில் இருக்கச் செய்யும்.

உடம்புக்குள்ளே இருந்து அதிகமாக உழைத்து வேலை செய்கிற உறுப்புகளில் மூளை, நுரையீரல், (சுவாசப்பை), இருதயம், இரைப்பை, குடல்கள், ஈரல் என்பவையாகும். நாம் உண்ணும் உணவினால் இந்த உறுப்புகளும் உரம் பெறுகின்றன என்றாலும், இவற்றிற்குப் பலம் தருகிற தனி உணவுப் பொருள்களும் உள்ளன. அவற்றைக் கீழே தருகிறோம். உணவுப் பொருள் அல்லாத சில மருந்துப் பொருள்களும் அவ்வுறுப்புகளுக்கு பலந் தருகின்றன. அந்த மருந்துப் பொருள்களின் பெயரையும் கீழே தருகிறோம். மருந்துப் பொருள்களை வைத்தியர்களைக் கொண்டு மருந்தாகச் செய்து உபயோகிக்க வேண்டும். அவற்றை உபயோகிக்கத் தெரியாதவர், உணவுப் பொருள்களை மட்டும் உபயோகிக்கலாம்.

தலை மூளைக்கு வலிமை தருகிற பொருள்கள்:

வெள்ளாட்டுப் பால், வாதுமைப் பருப்பு, பருப்பு, சுரைவிரை, பறவைகளின் இறைச்சி, ஆட்டின் தலை மூளை, நெல்லிக்காய், நாரத்தம் பழம், ரோசாப்பூ, இஞ்சி முதலியவை. (தான்றிக்காய், கோரைக் கிழங்கு, சடாமாஞ்சில், அகிற்கட்டை, சந்தனம், இலவங்கம், கஸ்தூரி, முத்து முதலியவைகளும் மூளைக்கு வலிமை தரும் பொருள்களே. இவை உணவுப் பொருள்கள் அல்ல; மருந்துப் பொருள்கள். வைத்தியர்கள் மூலமாக இவற்றை மருந்தாகச் செய்து உபயோகப்படுத்தலாம்.)

இருதயத்திற்கு வலிமை தருகிற பொருள்கள்:

நெல்லிக்காய், மாதுளம்பழம், கொத்தமல்லி, ரோசாப்பூ, நாரத்தம் பழம், வெற்றிலை, சீமையத்திப் பழம், முதலியவை (சந்தனம், முத்து, பவழம், வெள்ளி, சிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு, சடாமாஞ்சில், லவங்கப்பட்டை, குங்குமப்பூ, ஏலம், ஏலக்காய், இலவங்கம் முதலிய பொருள்களும் இருதயத்திற்கு வலிமை தருவன. இவற்றை, மருந்தாகச் செய்து உபயோகிக்கவேண்டும்.)