பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
113
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே.'
இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானொடு திருப்போர்ப் புரத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடாவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.”
(திருப்போர்ப்புரம் - போர் என்னும் ஊருக்கு அருகில். பொருது - போர் செய்து. பற்றுக்கோட்பட்டு - பிடிக்கப்பட்டு. பெயர்த்துப் பெற்று - காலந்தாழ்ந்துப் பெற்று. துஞ்சிய - இறந்த, தூங்கின.)
பிற்காலத்து நூலாகிய கலிங்கத்துப் பரணி இதைக் கூறுகிறது. பொய்கையார் களவழி பாடின பிறகு அதைக் கேட்டுச் சோழன் கணைக்காலிரும்பொறையை விடுதலை செய்தான் என்று அந்நூல் கூறுகிறது.[1]
களவழி நாற்பது செங்கட் சோழனைச் செங்கண்மால் (செய்யுள் 4, 5, 11) என்றும் செங்கட்சினமால் (செய்யுள் 15, 21, 29, 30, 40) என்றும் செம்பியன் (சோழன் - செய்யுள் 6, 23, 33,38) என்றும் சேய் (செய்யுள் 13, 18) என்றும் பைம்பூட்சேய் (செய்யுள் 34) என்றும் கூறுகிறது. தோற்றுப் போன கணைக்காலிரும்பொறையின் பெயரைக் கூறவில்லை. ‘கொங்கரை அட்டகளத்து’ என்றும் (செய்யுள் 14) ‘புனநாடன் வஞ்சிக்கோ’ என்றும் (செய்யுள் 39) கூறுகிறது.
கணைக்காலிரும்பொறைக்கும் செங்கட்சோழனுக்கும் இரண்டு இடங்களில் போர்கள் நடந்தன. கழுமலம் என்னும் ஊரிலும் பிறகு போர் என்னும் ஊரிலும் நடந்தன. கொங்கு நாட்டுக் கழுமலத்தில் செங்கணான் போரை வென்றான். இதைக் ‘காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்’ (செய். 36) ‘புனல் நாடன் வஞ்சிக்கோ அட்டகளத்து’ (செய். 39) என்பதனால் அறிகிறோம். கழுமலப்போரில் தோற்ற கணைக்காலிரும்பொறை பிறகு சோழநாட்டில் போர் என்னும் இடத்தில் சென்று செங்கணானுடன் போர்செய்தான். அந்தப் போரில் அவன் சிறைப்பட்டான். சிறையிலிருந்தபோது பொய்கையார் களவழி பாடினார்.
- ↑ 2