பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
161
பட்டிருக்கிறது. வெயிற்காலத்தில் செந்நிறமாக மலர்கிற (கலியாண) முருக்க மலர்க்கொத்து, சேவற்கோழி வேறு சேவலுடன் போர் செய்யும் போது சிலிர்த்துக்கொள்ளும் கழுத்து இறகு போல இருக்கிறது என்று இவர் உவமை கூறியிருப்பது மிகப் பொருத்தமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
“அழலகைந் தன்ன காமர் துதை மயிர்
மனையுறை கோழி மறனுடைச் சேவல்
போர்புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் ஒண்குரல்” (அகம் 277 : 14 - 17)
கருவூர்ப் பவுத்திரனார்
பவுத்திரன் என்பது இவருடைய பெயர். இவர் பாடிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 162ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. பசுக்கூட்டம் ஊருக்குத் திரும்பி வருகிற மாலை வேளையில் முல்லை முகைகள் பூக்குந் தருவாயிலிருப்பதைக் கண்டு தலைமகன் கூறியதாக அமைந்த இந்தச் செய்யுள் படிப்பதற்கு இன்பமாக இருக்கிறது
கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
பேய், பூதம், சாத்தன் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மக்களுக்குப் பெயராக வழங்கப்பட்டன. பேய், பூதம் என்னும் பெயர்கள் அந்தக் காலத்தில் தெய்வம் என்னும் பொருளில் உயர்வாக மதிக்கப்பட்டன. பிற்காலத்திலுங்கூட இப்பெயர்கள் வழங்கப்பட்டன. பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்னும் பெயர்களைக் காண்க. மிகப் பிற்காலத்தில், பேய் பூதம் என்னும் பெயர்கள் சிறப்பான உயர்ந்த பொருளை இழந்து தாழ்வான பொருளைப் பெற்றன. கொங்கு நாட்டுக் கருவூரில் பூதம் என்னுந் தெய்வத்துக்குக் கோயில் இருந்தது. இந்தப் புலவருக்கு அந்தத் தெய்வத்தின் பெயரை இட்டனர் போலும்.
கருவூர்ப் பூதஞ் சாத்தனார் இயற்றிய செய்யுள் ஒன்று அகநானூற்றில் ஐம்பதாம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதனாதனார்
இவர் கருவூரில் பெருஞ்சதுக்கம் என்னும் இடத்தில் இருந்தவர் என்று தோன்றுகிறார். இவருடைய பெயர் பூதன் ஆதன் என்பது. இவருடைய வரலாறு தெரியவில்லை. கோப்பெருஞ்சோழன்