உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



பெயரைத் தாட்டோபதிஸ்ஸன் என்று மாற்றிக்கொண்டான். இவன் தமிழ்நாட்டில் எங்கிருந்து தமிழச் சேனைகளை அழைத்து வந்தான் என்பது தெரியவில்லை. பாண்டிய நாட்டிலிருந்து அழைத்து வந்திருக்கக்கூடும்.

தோற்று ஓடிய அக்கபோதி தமிழ்நாட்டிலே எந்த அரசனிடம் அடைக்கலம் புகுந்தான் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழப் படையை அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து தாட்டோபதிஸ்ஸனுடன் போர் செய்தான். இந்தப் போரில் அக்கபோதி வெற்றியடைந்து தாட்டோபதிஸ்ஸன் தோல்வியடைந்தான். ஆகவே, அக்கபோதி மூன்றாவது முறையாக மீண்டும் அரசனானான். போரில் தோற்று அரசை இழந்த தாட்டோபதிஸ்ஸன் மீண்டும் படைதிரட்டத் தமிழ்நாடு சென்றான். இவ்வாறு தாட்டோபதிஸ்ஸனும் அக்கபோதியும் பலமுறை போர் செய்து, தோற்பதும் வெல்வதும் அரசாள்வதும் அரசு துறப்பதுமாக மாறி மாறி இலங்கையை அரசாண்டார்கள். இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து அடிக்கடி போர்வீரர்களை அழைத்துக் கொண்டு வந்தபடியால், தமிழ வீரர்கள் அநுரையில் அதிகமாகக் குடியேறினார்கள். அநுராத புரத்தில் தமிழர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று.