உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


திருவதிகையில் குணதரவீச்சரம் கட்டிய காடவனாகிய பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவன் என்றும், அவனைத்தான் நாவுக்கரசர், சமண மதத்திலிருந்து சைவமதத்திற்கு மாற்றினார் என்றும், நாவுக்கரசரும் மகேந்திரவர்மனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் முதன் முதலாக ஆராய்ந்து கூறியவர் திரு.வி.வெங்கையா அவர்களாவார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது:-

திருநாவுக்கரசர் அல்லது அப்பர் என்பவருடைய காலத்தில் இருந்த திருஞானசம்பந்தர் அப்பருக்கு இளையவர். பெயர் குறிக்கப்படாத ஒரு பல்லவ அரசன் நாவுக்கரசரை முதலில் துன்புறுத்திப் பிறகு அவரைப் போற்றினான். இந்த அரசனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. குணதரன் என்பது. இந்த அரசனுக்குக் கீழ்ப்பட்டுச் சிற்றரசனாக இருந்த ஒருவன் தன்னுடைய அரசன் பெயரினால் குணதரவீச்சரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று சொல்லப்படுகிறது. செங்கல்பட்டுக்கு அடுத்த வல்லம் கிராமத்துக் குகைக்கோயில் சாசனம் ஒன்று குணபரனை மகேந்திர போத்தரசன் என்று கூறுகிறது. டாக்டர் ஹல்ட்ஸ் என்பவர், ஊதயேந்திரச் செப்பேட்டுச் சாசனத்தில் கூறப்படுகிற இரண்டு மகேந்திரவர்மன் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். குணதரன், குணபரன் என்னும் பெயர்களில் மிகச் சிறுவேறுபாடுதான் காணப்படுகிறது. வல்லம் குகைக்கோயில் சாசனத்தில் கூறப்படுகிற குணபரன் என்னும் மகேந்திரன்தான், திருநாவுக்கரசரை முதலில் துன்புறுத்திப் பிறகு போற்றினான் என்றும், பெரிய புராணம் கூறுகிற குணதரன் ஆவன் என்றும் துணிந்து கூறலாம். ஞானசம்பந்தர், முதலாம் நரசிம்ம வர்மன் காலத்தில் இருந்தவர் என்று முன்னமே கூறியுள்ளேன். ஞான சம்பந்தருக்கு மூத்தவர் நாவுக்ரசர் ஆகையினாலே, வல்லம் சாசனம் கூறுகிற குணபாரனாகிய மகேந்திரபோத்தரசன் (இவனைப் பெரிய புராணம் கூறுகிற குணதரன் என்று துணிந்து கூறுகிறேன்) முதலாம் நரசிம்மவர்மனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மனாகத்தான் இருக்க முடியும்.

பெரியபுராணம் கூறுகிற குணதரன் என்னும் பெயரும் வல்லத்துச் சாசனம் கூறுகிற குணபரன் என்னும் பெயரும் ஒரே அரசனைத்தான் குறிக்கின்றன; அந்த அரசன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவன் என்று


[1]

[2]

  1. 1. Dr. Hultzsch.
  2. 2. Epi. Ind. Vol. III.