உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. வைணவ ஆழ்வார்கள்

இக்காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியிருந்ததை முன்னரே கூறினோம். நரசிம்மவர்மனான மாமல்லன் காலத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், அப்பூதியடிகள், முருகநாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலிய நாயன்மார்கள் இருந்தார்கள் என்பதையும், அவர்களில் அப்பரும், சம்பந்தரும் தமிழ்நாடெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்து பௌத்த மதத்தையும் சமண சமயத்தையும் கண்டித்துச் சைவசமயப் பிரசாரம் செய்தார்கள் என்பதையும் கூறினோம்.

இக்காலத்திலேயே வைணவ சமயத்து ஆழ்வார்கள் யீசலர் இருந்தார்கள். இவ்ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தையும் வைணவ சமயத்தையும் தமிழ்நாட்டில் பரப்புவதற்குப் பாடுபட்டார்கள். இவர்கள் காலத்தில் இருந்த ஆழ்வார்கள் நால்வர். இவர்களில் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்பவர் மூவரும் முதலாழ்வார் என்று கூறப்படுவார்கள். திருமழிசை ஆழ்வார் என்பவர் முதலாழ்வார்கள் காலத்திலே இருந்தவர். ஆனால், வயதினால் அவர்களுக்கு இளையவர்.

இந்த நான்கு வைணவ ஆழ்வார்களும் நரசிம்மவர்மனான மாமல்லன் காலத்தில் இருந்தவர்கள். இவர்களில் முதலாழ்வார் மூவரும் பக்திநிலையில் நின்று யோகிகளாக இருந்தவர்கள். ஆகவே இவர்கள் சமணபௌத்த சமயங்களைத் தாக்காமலே தமது கொள்கையை மட்டும் நிலைநிறுவினார்கள். இவர்களுக்கு இளையரான திருமழிசையாழ்வார், பக்தி இயக்கத்தையும் வைணவ சமயத்தையும் நிலைநாட்டுவதில் அதிக ஊக்கமுடையவராயிருந்தார். இவர் சமணபௌத்த மதங்களை மட்டுமல்லாமல் சைவ மதத்தையும் கண்டித்துப் பிரசாரம்செய்தார். இவர்கள் வரலாற்றினைச் சுருக்கமாக ஆராய்வோம்.

பொய்கையாழ்வார்

காஞ்சீபுரத்திலே திருவெஃகா என்னும் திருக்கோயிலுக்கு அருகிலே இவர் பிறந்தவர் என்று வைணவ வரலாறு கூறுகிறது. பொய்கையிலே (குளத்திலே) பிறந்தபடியினாலே இவருக்குப் பொய்கையாழ்வார் என்று-