உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


"அளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே."7

"விரிக்கு மரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல்
உரைக்கி லரும்பொரு ளுள்ளவா கேட்கில் உலகமுற்றும்."8

சம்பந்தர், மதுரைத்தொகையாக்கினான் என்று கூறுவதும், அப்பர், விழுமியநூல் ஆய்ந்தான், களவுகண்டனள் என்று கூறுவதும் இறையனார். அகப்பொருள் என்னும் நூலை கருத்தில் கொண்டு கூறியதாகத் தோன்றுகின்றது.

சம்பந்தர் தமது காலத்தில் வழங்கிய கிளிவிருத்தம் எலி விருத்தம் என்னும் நூல்களைக் கூறுகிறார். இந் நூல்களைச் சமணர் இயற்றினர்.

"கூட்டினார் கிளியின் விருத்த முரைத்ததோ ரெலியின்தொழில்
பாட்டு மெய்சொலிப் பக்கமே செலும் எக்கர் தங்களை....."9

அப்பா சுவாமிகள் நரிவிருத்தத்தைக் கூறுகிறார்.

"அரியயற் கரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம தாகுவர் நாடரே."10

பிற்காலத்தில், 11-ஆம் நூற்றாண்டிலே உண்டான வீர சோழியம் என்னும் இலக்கண நூலின் உரையிலே, அந்நூல் உரையாசிரியர் கிளி விருத்தம், எலிவிருத்தம், நரி விருத்தம் என்னும் நூல்களைக் கூறுகிறார். அவர் கூறுவது: "குண்டலகேசி விருத்தம் கிளிவிருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் முதலியவற்றுள் கலித்துறைகளு முளவாம்.” என்பது.

சம்பந்தர் கூறிய கிளிவிருத்தம் எலிவிருத்தம் என்னும் நூல்கள் இப்போது மறைந்துவிட்டன. அப்பர் கூறிய நரிவிருத்தம் என்னும் நூல் இப்போதும் இருக்கிறது.

நரிவிருத்தம், சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சீவக சிந்தாமணியை இயற்றுவதற்கு முன்னர் நரிவிருத்தத்தைத் திருத்தக்கதேவர் இயற்றித் தமது ஆசிரியரிடம் காட்டினார் என்றும் அதனைக் கண்ட ஆசிரியர், சீவக சிந்தாமணியை இயற்ற அனுமதியளித்தார் என்றும் வரலாறு கூறப்படுகிறது. அப்பர் சுவாமிகள் நரிவிருத்தத்தைக் கூறுகிற படியினாலே,