பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
31
கருவூர்
இது கொங்கு நாட்டில் மதிலரண் சூழ்ந்த ஊர். ஆன் பொருநை யாற்றின் கரைமேல் அமைந்திருந்தது. இது சேரரின் கொங்கு இராச்சியத்தின் தலைநகரமாகவும் இருந்தது. சேரர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, தங்கள் சேர நாட்டுத் தலைநகரமான கருவூரின் பெயரையே இதற்கு இட்டனர் என்று தோன்றுகிறது. இதற்கு வஞ்சி என்றும் வேறு பெயர் உண்டு. இவ்வூரில் வேண்மாடம் என்னும் பெயருள்ள அரண்மனையை யமைத்துக்கொண்டு ‘இரும்பொறை யரசர்’ கொங்கு நாட்டை யரசாண்டனர். இப்போது இந்தக் கருவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர் வட்டத்தில் இருக்கிறது.
ஏறத்தாழ கி.பி. 150 இல் இருந்த தாலமி (ptolemy) என்பவர் தம்முடைய நூலில் இதைக் கரொவுர (Karoura) என்று கூறுகின்றார். இவ்வூர் உள்நாட்டில் இருந்தது என்றும் கேரொபொத்ரருக்கு (கேரள புத்திரர்க்கு) உரியது என்றும் கூறுகின்றார். இக்கருவூர் உள்நாட்டில் இருந்ததென்று கூறுகிறபடியால், கடற்கரைக்கு அருகில் இருந்த சேர நாட்டுக் கருவூர் அன்று என்பதும், கொங்குநாட்டுக் கருவூரைக் குறிக்கின்றது என்றும் தெரிகின்றன. மேலும், இக்கருவூரில் உரோம் தேசத்துப் பழங்காசுகள் கிடைத்திருப்பது இவ்வூரில் யவன வாணிகத் தொடர்பு இருந்ததைத் தெரிவிக்கின்றது.
சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரண்டு கருவூர்கள் இருந்தன. ஒன்று மேற்குக் கடற்கரையில் சேரரின் தலைநகரமாக இருந்த கருவூர். இன்னொன்று கொங்கு நாட்டில் இருந்த இந்தக் கருவூர். இவ்விரண்டு கருவூருக்கும் வஞ்சி என்று வேறு பெயரும் உண்டு. இரண்டு கருவூர்களையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இரண்டு கருவூர்கள் இருந்ததை யறியாமல், ஒரே கருவூர் இருந்ததாகக் கருதிக்கொண்டு, சேரர் தலைநகரமாகிய கருவூர் வஞ்சி, சேரநாட்டிலிருந்ததா கொங்கு நாட்டிலிருந்ததா என்று சென்ற தலைமுறையில் அறிஞர்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இது பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் இரு தரத்தாராலும் எழுதப்பட்டன. ஒரே காலத்தில் இரண்டு (கருவூர்) வஞ்சி மாநகர்கள், சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இருந்தன என்பதை அறியாதபடியால் இந்த ஆராய்ச்சி நடந்தது. கொங்கு நாட்டையாண்ட சேர அரசர் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட