உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



(ஸ்ரீ மாறன், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்துக்குப் பிறகு, அவன் மகன் நிருபதுங்கவர்மன் காலத்திலும் இருந்தான். இவனுடைய ஆட்சியின் பிற்காலத்தில், மாயா பாண்டியன் என்பவன் இவனுடன் அரசு உரிமைக்காகக் கலகஞ்செய்தான். மாயா பாண்டியனுக்கு இலங்கையரசன் சேனன் என்பவன் உதவிசெய்தான். பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனும் மாயா பாண்டியனுக்கு மறைமுகமாக உதவிசெய்தான் என்று தெரிகிறது. இந்தப்போரில் ஸ்ரீ மாறன் புண்பட்டுத் தோற்றுப்போனான். இப்போர், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் நிகழவில்லை. அவன் மகனான நிருபதுங்கவர்மன் காலத்தில் நிகழ்ந்தது. ஆகவே, அப்போரைப் பற்றி இங்கு நாம் கருதவேண்டியதில்லை.)

சின்னமனூர் செப்பேடு

வரகுண மகாராசனைப் பற்றியும் அவன் மகனான ஸ்ரீ மாறனைப் பற்றியும் சின்னமனூர் பெரியசெப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது.


வடமொழிப் பகுதி : “.... அவன் மகன், புகழ் பெற்றவனும் ஒழுக்கத்தில் சிறந்தவனுமான இராஜசிம்மன். அவன் மகன் பெரிய வீரனான வரகுணன். அவன் மகன், கேட்பதற்கு மகிழ்ச்சியைத் தரும் புகழுடையவனும் திருமகள் மணாளனுமான ( ஸ்ரீ வல்லபனான) ஸ்ரீ மாறன். இவன் இணையற்ற வீரன்; குடிமக்களால் நேசிக்கப்பட்டவன். மாயா பாண்டியனையும் சேரனையும் சிம்மளனையும் பல்லவனையும் வல்லபனையும் வென்று ஒற்றைக் குடைக்கீழ் உலகத்தை அரசாண்டான்.”


தமிழ்ப் பகுதி : “கொற்றவர்கள்தொழு கழற்கால் கோவரகுண மஹாராஜனும் ஆங்கவற் காத்மஜனாகி[1] அவனிதலம் பொறைதாங்கித் தேங்கமழ் பொழிற் குண்ணூரிலுஞ் சிங்களத்தும் விழிஞத்தும் வாடாத வாகை சூடிக்கோடாத செங்கோல் நடாவிக் கொங்கலர் பொழிற் குடமூக்கிற் போர் குறித்து வந்தெதிர்ந்த கங்க பல்லவ சோளகாலிங்க மாகாதாதிகள் குருதிப் பெரும்புனல் குளிப்பக் கூர்வெங்கணை தொடை ஞெகிழ்த்துப் பகுதி ஆற்றலொடு விளங்கின பரசக்கிர கோலாகலனும்.”[2]

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலே பாண்டி நாட்டை வரகுண மகாராசன் என்னும் மாறஞ்சடையனும் அவனுக்குப் பிறகு-

  1. 19
  2. 20