பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
343
துரத்தப்பட்டவன் இலங்கைக்கு வந்து சேனனுடைய உதவியை வேண்டினான். பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்துச் செல்ல எண்ணியிருந்த சேனனுக்கு, இது ஓர் நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆகவே, சேனன், தன் சேனாபதியான குட்டகன் தலைமையில் பெருஞ்சேனையைப் பாண்டிய நாடிற்கு அனுப்பினான்.
சிங்களச் சேனாபதி குட்டகன், சேனையுடன் மதுரைக்குச் சென்று பாண்டியனுடன் போர் செய்து வென்று, முன்பு இலங்கையிலிருந்து பாண்டியன் கொண்டுபோன பொருள்களையெல்லாம் மீட்டுக் கொண்டு இலங்கைக்குச் சென்றான். செல்வதற்கு முன்பு, இலங்கை மன்னனிடம் அடைக்கலம் புகுந்த பாண்டியன் உறவினனுக்கு (மாயா பாண்டியனுக்கு) முடிசூட்டிப் பட்டாபிஷேகம் செய்து அவனை அரசனாக்கினான்.[1]
இந்தச் சேனன் பல தான தருமங்களைச் செய்தான். மாவலி கங்கையாற்றில் மணிமேகலை என்னும் அணையைக் கட்டினான். மணிஹீர ஏரிக்குக் கலிங்கு கட்டினான். கட்டந்த நகரத்துக்கருகிலிருந்த பழைய ஏரியைப் புதுப்பித்தான். சேதிமலையின் மேல்நோயாளிகளுக்கு மருத்துவச் சாலை கட்டினான். இவன் 35 ஆண்டு அரசாண்டான்.
(இவன், தன்னிடம் அடைக்கலம் புகுந்த மாயா பாண்டியனுக்கு முடிசூட்டினான் என்றும் அவனுக்கு எதிராக இருந்த பாண்டியனைப் போரில் கொன்றான் என்றும் சூலவம்சம் கூறுகிறது. ஆனால், சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம், பாண்டியன் ஸ்ரீ மாறன் (வரகுண பாண்டியன் மகன்) மாயா பாண்டியனை வென்றதாகக் கூறுகிறது. "அவன் (வரகுணன்) மகன், கேட்பதற்கு மகிழ்ச்சியைத் தரும் புகழுடையவனாகிய ஸ்ரீ வல்லபனான ஸ்ரீ மாறன். இவன் இணையற்ற வீரன், குடிமக்களால் நேசிக்கப் பட்டவன், மாயா பாண்டியனையும் கேரளனையும் சிம்மளனையும் பல்லவனையும் வல்லபனையும் வென்று ஒற்றைக் குடைக்கீழ் உலகத்தை அரசாண்டான்” என்று சின்னமனூர் பெரிய செப்பேட்டுச் சாசனத்தின் வடமொழிப் பகுதி கூறுகிறது. ஆகவே, இலங்கை நூலாகிய சூலவம்சம், பாண்டியனைச் சிங்கள சேனாபதி கொன்று விட்டான் என்று கூறுவது நம்பத்தகுந்ததல்ல.)
- ↑ 30