பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
355
சுந்தரமூர்த்தி நாயனார் தமது பதினாறு வயது முதல் பதினெட்டு வயது வரையில் இரண்டு ஆண்டுகள் கடவுளிடம் பக்திசெய்து அடியாராக இருந்தார். மிகச் சுருங்கிய காலத்தில் சிவகதி யடைந்த சிவனடியார்களில் இவரும் ஒருவர்.
இவர் பாடியருளிய தேவாரப் பதிகங்கள் தொகுக்கப்பட்டு ஏழாந் திருமுறை என்று வழங்கப்படுகிறது. இவர் முப்பத்தெட்டாயிரம் பதிகங்கள் பாடினார் என்பர்.
“பின்புநில நாளின்கண் ஆரூரர் நம்பி
பிறங்குதிரு வெண்ணெய்நல்லூர் பித்தா என்னும்
இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்
ஈறாய்முப் பத்தெண்ணா யிரமதாக
இன்புபகன் றவர்நொடித்தான்
மலையிற் சேர்ந்தார்”
என்பது திருமுறை கண்ட புராணம்.
இப்போது உள்ள திருப்பதிகங்கள் நூறு மட்டுமே. வெள்ளிப்பாடல் என்னும் காரோனைப் பதிகம், பிற்காலத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு பெரிய புராணத்திலே இடையிடையே கூறப்படுகிறது. தடுத்தாட்கொண்ட புராணத்திலும், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்திலும், கழறிற்றிவார் என்றும் சேரமான் பெருமாள் நாயனார் புராணத்திலும், வெள்ளானைச் சருக்கத்திலும் இவருடைய வரலாறு கூறப்பட்டுள்ளது.
சேரமான் பெருமாள் நாயனார்
இவர் சேரநாட்டரசர். பெருமாக்கோதையார் என்பது இவருடைய பெயர். கடற்கரையை யடுத்த மகோதை என்னும் கொடுங்கோளூரைத் தலைநகரமாகக் கொண்டு அரசாட்சி செய்தார். இவருக்குக் கழறிற்றறிவார் என்னும் பெயரும் உண்டு. சைவ சமயப் பற்றும் சிவபக்தியும் உடையவர். சைவ சாத்திரங்களை நன்கு கற்றவர். தமிழில் கவிபாடும் புலமை மிகுந்தவர்.