உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கேள்விப்பட்டார்; பெருஞ் சினங் கொண்டார். சிவபெருமானை ஒரு பெண்ணிடம் தூது அனுப்பலாமா? அவனை நேரில் காண்பேனானால் என்ன நிகழுமோ! என்று சினந்து பேசினார். சுந்தரரிடம் அடங்காச் சீற்றங் கொண்டார். இதனை யறிந்த சுந்தரர் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் கலிக்காமருக்கு வயிற்றில் சூலை நோயை உண்டாக்கி, அவர் கனவில் தோன்றி “இந்நோய். சுந்தரனால் அல்லாமல் தீராது” என்று கூறினார். பிறகு, சுந்தரரிடம், ‘நீ போய் கலிக்காமன் வயிற்று வலியைத் தீர்த்துவிட்டு வா” என்று சொன்னார்.

சுந்தரர் கலிக்காமரிடம் சென்றார். அவர் வருகையை யறிந்த கலிக்காமர், சுந்தரரால் சூலை நோய் நீங்குவதைவிட உயிர் விடுவதே மேல் என்று நினைத்துக் கைவாளினால் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டார். சுந்தரர் வந்து நடந்ததை அறிந்து தாமும் உயிர்விடத் துணிந்து அங்கிருந்த வாளை எடுத்தார். அப்போது கலிக்காமர், அவர் கையைப் பிடித்துத் தடுத்தார். சுந்தரர் இவரை வணங்க, இவரும் அவரை வணங்கினார். பின்னர் இருவரும் நண்பர்காளகித் திருப்புன்கூருக்குச் சென்று கடவுளை வணங்கினார்கள். பிறகு, கலிக்காமர் சுந்தரருடன் திருவாரூருக்குச் சென்று அவருடன் சிலகாலம் தங்கியிருந்து, தமது ஊருக்குத் திரும்பினார்.

“ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைத் திருத்தொண்டத் தொகையில் பாராட்டியுள்ளார். மேலும், “ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து” அருள் செய்ததையும் திருப்புன்கூர்ப் பதிகத்தில் (3) கூறியுள்ளார்.

கோட்புலி நாயனார்

சோழ நாட்டு நாட்டியத்தான் குடி இவருடைய ஊர்; இவர், அரசனிடம் சேனாபதி தொழில் செய்தவர். சிறந்த சிவபக்தர். சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் இருந்தபோது, அவரிடம் சென்று அவரைத் தமது ஊருக்கு அழைத்தார். அவ்வாறே சுந்தரர் நாட்டியத்தான் குடிக்குச் சென்றபோது, கோட்புலியார் அவரைச் சிறப்பாக வரவேற்றார். வரவேற்றுத் தமது குமாரத்திகளாகிய சிங்கடியார், வனப்பகையார் என்பவர்களை அழைத்து அவரை வணங்கச் செய்தார். பிறகு,