398
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
பட்டம் பெற்றிருப்பதும், சேர அரசர்களிடம் தோல்வியடைந்ததும் இக்கருத்திற்கு வலுவூட்டுகின்றன.
4. வழுதி என்னும் பெயருடைய அரசர்கள்
‘வழுதி’ என்பது பாண்டியர்க்கு வழங்கப்பட்ட பெயர்களுள் ஒன்று. இச்சொல் ‘வழித்தோன்றல்’ என்னும் பொருளில் தோன்றியதாக எண்ண இடமுண்டு. இப் பெயரைக் கொண்ட அரசர்கள் சங்க காலத்தில் பலர் இருந்தனர். பெருவழுதி என்னும் பெயர்பெற்றுள்ள அரசர்கள் நால்வேறு அடைமொழிகளைக் கொண்ட நிலையில் காணப்படுகின்றனர். சிறப்பு அடைமொழிகளை நோக்கி, இவர்களை வெவ்வேறு அரசர்கள் என்று கொள்வதே பொருத்தமாக அமைகின்றது.
பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
வழுதி எனப்படும் அரசர்களுள் இவனே காலத்தால் முந்தியவனாகக் காணப்படுகிறான்[1] இவனை வாழ்த்தும் புலவர் பஃறுளியாற்றின் மணலைக்காட்டிலும் பல்லூழி வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.[2] பஃறுளியாறு சங்ககாலத்திலேயே கடலால் கொள்ளப்பட்டது. எனவே, இவன் அந்த ஆறு கடலால் கொள்ளப்படுவதற்குமுன் வாழ்ந்தவன் என்று தெரிகிறது. ஆதலால், இவனைப் பிறரினும் பழமையானவன் என்று நாம் கொள்ளலாம். இவனைப் பாடிய எல்லாப் புலவர்களும் இவனை மட்டுமே பாடியுள்ளனர். இவர்கள் வேறு அரசர்களையும் பாடியிருந்தால் அவ்வாறு பாடப்பெற்ற அரசர்களின் காலத்தைக் கொண்டு இவ்வரசனுடைய காலத்தைக் கணிக்கக் கூடும்.
இவன் பஃறுளியாறு கடலோடு கலக்குமிடத்தில் நிகழ்ந்த விழாவில் கலந்துகொண்டான்.[3] அவ் விழாவில் யாழில் வல்ல வயிரியர்களுக்குச் சொக்கத் தங்கத்தைப் பரிசாக வழங்கினான்.[4] அத்துடன், தன் கோமகனையும் அவர்களுக்குப் பரிசாக அனுப்பி வைத்தான். அவன் ‘கடல்விழா நடத்தி மகிழ்ந்த நெடியோன்’ என்னும் பெயரினன்.[5] கடல்விழா என்பது வணிகர்விழா. முதுகுடுமிப் பெரு வழுதியின் மகன் நெடியோன் ஆவான். இவன் ‘குடுமி தன்கோ’ என்று குறிப்பிடப்படுகிறான். முதுகுடுமியின் மகனான நெடியோனின் கால்வழித் தோன்றியவன்தான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.[6]