உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


யம்பலம் என்று வழங்கப்பெறும் மதுரைச் சொக்கநாதர் கோயில் மன்றத்தில் உயிர்நீத்தான்.[1] இந்தப் பெருந்திருமாவளவனும், பெரு வழுதியும் சேர்ந்து வென்ற நாடுகளில் புலிச் சின்னமும் கயற்சின்னமும் சேர்த்துப் பொறிக்கப்படவேண்டும் என்று புலவர் அறிவுரை கூறினார். இவனது ஆட்சிக் காலத்தில் சோழ, பாண்டிய நாட்டு இலச்சினைகள் இவ்வாறு விளங்கின எனக் கொள்ளலாம். (இந்த கூட்டுச் சின்னத்தை மீண்டும் தனிச் சின்னமாக்கியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.) பாண்டியர் ஐந்து கூறுகளாகப் பிரிந்து நாடாண்டு வந்தனர்.[2]

இளம்பெருவழுதி

இவன் புலவன் என்ற நிலையிலேயே காணப்படுகிறான். வழுதி என்னும் பெயர் அமைதியை எண்ணி, ஏதாவது ஓரிடத்தில் இளவரசனாகவேனும் இருந்திருக்கக்கூடும் என்று கருதலாம். வழுதியர் குடியில் தோன்றியவன் எனக் கொள்ளலாம். கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் பெயரால் இவனைப் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் குறிப்பிடுகிறார். தேவாமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்ணாமல் பகுத்துண்ணல், பிறர் அஞ்சுகிறார்களே என்று தானும் பழிக்கு அஞ்சிச் செயலாற்றுதல், புகழ் தரத்தக்க செயலுக்காக உயிரையே கொடுத்தல், பழிக்கத்தக்க செயல்களில் உலகமே பரிசாகக் கிடைப்பதாயினும் அவற்றைச் செய்யாமை, தனது ஊக்கமான செயல் முயற்சிகளைப் பிறர் நலம் கருதிச் செய்தல் ஆகிய சிறந்த பண்புடையவர்கள் உலகில் வாழ்வதால்தான் இந்த உலகம் அழியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான்.[3] இவன் கடலுள் மூழ்கி இறந்து போனான். கடற்போரில் ஈடுபட்டிருந்தபொழுது இந்தச் சாவு நிகழ்ந்து இருக்கலாம். முதுகுடுமிப் பெருவழுதி கடற்போரில் ஈடுபட்டதையும், செங்குட்டுவன் கடல் வாணிகத்திற்கு உதவும் பொருட்டுப் போரிட்டதையும் நாம் இங்கு நினைவுகூரலாம். முதுகுடுமிப் பெருவழுதி கடற்போரில் ஈடுபட்டதைக் கண்டோம். இப் பாண்டியன் கடலில் மாண்டவன் என்பது தெரிகிறது. இருவர் பெயர்களும் பெருவழுதி என்றமைந்துள்ளன. ‘முது’, ‘இள’ என்னும் அடைமொழிகள், மூத்தவன், இளையவன் என்னும் பொருளைத் தருவனவாய் இவர்களுக்கு அமைந்தனவோ என்று ஐயுற வேண்டியுள்ளது.

  1. 110
  2. 111
  3. 112