414
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
மலையத்துவச பாண்டியனைப் பற்றி வடமொழி பாகவத புராணம் மற்றொரு வரலாற்றைக் கூறுகிறது. இப்புராணக் கதைகள் நம்பத்தகுந்தன அல்ல.
தடாதகைப் பிராட்டியார்
மலையத்துவச பாண்டியனுக்குப் பிறகு அவனுடைய மகளாகிய தடாதகைப் பிராட்டியார் அரசாண்டதாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன? அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி அம்மையே தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் செலியூகஸ் நிகேடாரின் தூதுவராக இருந்த மெகஸ்தனீஸ் தம்முடைய காலத்தில் பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி அரசாண்டாள் என்று கூறியுள்ளார். ஹெர்க்குலிஸ் என்ற கிரேக்க வீரனுக்குப் பண்டேயா என்று பெயரிட்டான் என்பதும், பாண்டிய நாட்டைத் தடாதகையார் அரசாண்டார் என்பதும் ஒரே வரலாற்றைக் குறிக்கின்றன எனலாம்.
பாண்டிய அரசைப்பற்றி மெகஸ்தனீஸ் இன்னொரு செய்தியையும் கூறியுள்ளார். பாண்டிய அரசிக்கு 365 ஊர்கள் இருந்தன. ஒவ்வோர் ஊராரும் அரண்மனைக்கு நாள்தோறும் கடமை செலுத்தினார்கள். இந்த அரசிறை, காசாக இல்லாமல் பொருளாகச் செலுத்தப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதரி என்ற இடைக்குல மடந்தை அரண்மனைக்குச் சேரவேண்டிய இறைவரியை நெய்யாகச் செலுத்தினாள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆரியப்படை கடந்து, அரசு கட்டிலில்
துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்
கடைச் சங்ககாலத்தில் ஆட்சிசெய்த பாண்டியரில் சிலர் நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களின் பெயர் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்களை, இன்னின்ன நெடுஞ்செழியர் என்று பிரித்தறிவதற்கு அவர்பெயர்களுடன் சில அடைமொழியிட்டு வழங்கினார்கள். நம்பி நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பெயர்களைக் காண்க. இங்கு ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்வோம்.
மதுரையிலிருந்து பாண்டி நாட்டை யரசாண்ட இந்த நெடுஞ்செழியன் கல்விகற்ற அறிஞன்; செய்யுள் இயற்றவல்ல கவிஞன்.