உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


புறநானூற்று 183ஆம் செய்யுளைப் பாடியவன் என்றும் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்திலிருந்தவன் என்றும் கோவலனைத் தவறாகக்கொன்று அந்தத் தவற்றைப் பிறகு அறிந்து சிம்மாகனத்தி லிருந்தபடியே உயிர் விட்டவன் என்றும் சாஸ்திரியார் எழுதுகிறார். (P. 524/544.A Comprehensive History of India. Vol. 2. 1957).

ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான வெற்றிவேற்செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன், மதுரைக்கு வந்து அரசாண்டான். அவனுக்குப் பிறகு பாண்டிநாட்டை யரசாண்டவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம்

சங்க காலத்திலே, மதுரைமா நகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய செய்யுள்கள் கடைச்சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச்சங்கம் கி. பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது.

ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும், நேர்மையாகவும், சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச்சங்கம் கி.பி.5 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர் எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மையானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித்துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமரை மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள்கூட, ஆராய்ந்து பார்த்து உண்மை காணத் தெரியாமல், பிள்ளையவர்களின் தவறான முடிபுகளை உண்மையானவை எனக்கொண்டு மயங்குகிறார்கள். பிள்ளையவர்கள் பதிப்பித்த நூல்கள் போற்றற்குரியவை; பழைய நூல்களைப் பதிப்பிப்பதில் அவர் வெற்றி