உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



வச்சிநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526-இல் (கி. பி. 470) மதுரையில் திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தேவசேனர் என்னும் சமண ஆசிரியர் தமது தர்சனசாரம் என்னும் நூலில் எழுதியிருக்கிறார். இந்தச் சான்றைக் காட்டி வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிரநந்தியின் திரமிள சங்கந்தான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் என்று கூறுகிறார். இந்தச் செய்தியில், பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் வச்சிரநந்தியின் திரமிள சங்கமும் ஒன்று என்று கூறப்படவில்லை. பிள்ளையவர்கள் தாமாகவே இட்டுக்கட்டிக் கூறுகிறார். இனி, வச்சிரநந்தியின் திரமிள சங்கம் என்பது யாது என்பதை ஆராய்வோம்.

வச்சிரநந்தி சமண சமயத்தைச் சேர்ந்த முனிவர். இவர் மதுரையிலே திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார். திரமிளம் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றே. இவற்றின் பொருள் தமிழ் என்பது. திரமிள சங்கம் என்றால் தமிழ்ச் சங்கம் என்பது பொருள். ஆனால், வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை ஆராயும் சங்கம் அன்று; தமிழ்ச் சங்கம் அன்று; தமிழச் சங்கம், சமண சமய சம்பந்தமான சங்கம். அதாவது, சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்துப்பட்ட சங்கம்.

சமணத் துறவிகள் அந்தக் காலத்தில் பெருங் கூட்டமாக இருந்தனர். சமண முனிவர்களின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். பௌத்த பிட்சுக்களின் கூட்டத்திற்கும் சங்கம் என்பது பெயர் சமண முனிவரின் சங்கங்கள் (கூட்டங்கள்) நான்கு பெரும் பிரிவுகளாகவும், பல உட்பிரிவுகளாகவும் அக்காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தன. நான்கு பெரும் பிரிவுகள் நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என்பன. (கணம் - சங்கம்). இந் நான்கு கணங்களில் நந்தி கணம் பேர் போனது. திரமிள சங்கத்தை ஏற்படுத்திய வச்சிரநந்தியும் நந்தி கணத்தைச் சேர்ந்தவரே. நந்தி கணத்தில் சமண முனிவர் கூட்டம் அதிகமாகப் பெருகிவிட்டபடியினாலே, வச்சிரநந்தி ஆசாரியர், அந்தக் கணத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவுக்குப் பழைய நந்திச் சங்கம் என்றும், மற்றொரு பிரிவுக்குத் திரமிள சங்கம் என்றும் பெயர் கொடுத்தார் என்பது சமண சமய வரலாறு. தமிழ் முனிவர்கள் அதிகமாக இருந்தபடியினாலே திரமிள சங்கம் என்று பெயர் சூட்டினார்.

நந்தி சங்கத்தின் பிரிவுதான் திரமிள சங்கம் என்பதற்குக் கன்னட தேசத்தில் உள்ள ஒரு சாசனச் செய்யுள் சான்றாக இருக்கிறது. அச்செய்யுள் இது:-