உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

429


ஏற்பட்டிருக்க முடியாது. கி. பி. 300-க்கு முற்பட்ட காலத்திலேதான் ஏற்பட்டிருக்கமுடியும். கி. பி. 600-க்குப் பிறகு பாண்டியர் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. ஏனென்றால் கி. பி. 630-இல் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தமது தேவாரப் பதிகத்திலே தமிழ்ச் சங்கம் நீண்ட காலத்துக்கு முன்பு இருந்ததாகக் கூறுகிறார். எனவே, கி. பி. 470-இல் களபரர் ஆட்சிக் காலத்தில் வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் தமிழ் ஆராய்ச்சிச் சங்கம் அன்று. அது சமண சமயம் பற்றிய சமண முனிவர்களின் சங்கமாகும். இந்த விதத்திலும் வையாபுரிப் பிள்ளையின் கருத்துத் தவறாகிறது.

இதுகாறும் ஆராய்ந்ததிலிருந்து தெரிகிறது என்னவென்றால், வையாபுரிப் பிள்ளையவர்கள், பொருளைத் தவறாகக் கருதிக் கொண்டு பொருந்தாத காரணங்களைப் பொருத்திக் காட்டியிருக்கிறார் என்பதும், அவருடைய முடிபுகள் தவறானவை என்பதும் ஆகும். வச்சிரநந்தியின் திராவிட சங்கம்வேறு, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் வேறு என்பது இங்கு நன்கு விளக்கப்பட்டது. பாண்டியரின் சங்கம் கி.பி.300-க்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என்பதும் விளக்கப்பட்டது.

வையாபுரிப் பிள்ளை பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தைப்பற்றிக் கூறுகிற இன்னொரு செய்தியையும் ஆராய்வோம். தலையாலங்கானத்துச் செருவென்றபாண்டியன் நெடுஞ்செழியனுடைய காலத்துக்குப் பிறகுதான் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒரு பாண்டியனால் நிறுவப்பட்டது என்று சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது என்பதைப் பிள்ளை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள் (பக்.59). உண்மைதான். மேலே நாம் காட்டியுள்ள சின்னமனூர்ச் சாசனப் பகுதி, பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டியதுபோல, பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதாகக் கூறுகிறது. அச் சாசனப் பகுதிக்குக் கீழே நாம் காட்டியுள்ள பாண்டியனுடைய மற்றொரு செப்பேட்டுச் சாசனப் பகுதி அதற்கு மாறாகக் கூறுகிறது. தமிழ்ச் சங்கம் ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு பாண்டியன் நெடுஞ் செழியன் இருந்ததாக இச் சாசனம் கூறுகிறது. ஆகவே, பிள்ளையவர்கள் கூறுவதுபோல நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டதென்பது தவறாகிறது. இதுபற்றி விளக்கமாக எழுதினால் இக்கட்டுரை பெருகி விரியும். ஆகையினாலே, இது பற்றித் தனியாக எழுதுவோம். ஒன்றைமட்டும் கூறுவோம். பாண்டியன் நெடுஞ்செழியன், கடைச் சங்க