பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
441
என்பது கேள்வி. இவ்வாராய்ச்சிக்குக் கம்ப இராமாயணம், துளசி இராமாயணம் முதலிய இராமாயணங்கள் பயன்படா. வால்மீகி முனிவர் இயற்றிய வடமொழி இராமாயணம் மட்டுந்தான் பயன்படும். வால்மீகி முனிவர் இலங்கையைப் பற்றிக் கூறும் குறிப்புகள் இரண்டு உள. அவை:
- 1. இராவணனுடைய இலங்கை திரிகூடமலையின் உச்சியில் இருந்தது.
- 2. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன், சீதையைக் கழுதை பூட்டிய வண்டியில் ஏற்றிக்கொண்டு, திரிகூடமலையைச் சூழ்ந்திருந்த ‘சாகரத்தை’க் கடந்து இலங்கைக்குச் சென்றான்.
சாகரம் என்பது கடலன்று
வால்மீகி முனிவர் கூறியுள்ள இந்த இரண்டு குறிப்புகளைக் கொண்டு, இராவணன் ஆண்ட இலங்கை, சிங்களத் தீவாகிய இலங்கை அன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம். என்னை? சிங்களத் தீவாகிய இலங்கை திரிகூடமலையின் உச்சியில் இல்லை; இது ஒரு தீவாக உள்ள கழுதைபூட்டிய வண்டியைச் செலுத்திக்கொண்டு போகக் கூடியபடி அவ்வளவு சிறிய கடல் (சாகரம்), அன்று சிங்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ள கடல். மலையின் உச்சியில் இருந்த ராவணனுடைய இலங்கையைச் சூழ்ந்திருந்த ‘சாகரம்’ உண்மையில் கடல் அன்று; ஏரிபோன்ற சிறிய நீர்நிலையாகும். கிருஷ்ணராஜ சாகரம், இராம சாகரம், இலக்ஷ்மண சாகரம் என்று பெயருள்ள ஏரிகள் சில இப்போதும் உள்ளன. அவைபோன்று சிறு நீர்நிலைதான் இராவணனுடைய இலங்கையைச் சூழ்ந்திருந்தது என்பது ஆராய்ச்சி வல்லார் துணிபு.
பரதமசிவ ஐயர் கூற்று
இராவணன் ஆண்ட இலங்கையானது, மத்திய இந்தியாவில் உள்ள இந்த்ரனா மலையுச்சியில் இருந்ததென்றும், இம்மலையைச் சூழ்ந்து மூன்று புறத்திலும் ஹிரான் என்னும் ஆறு பாய்கிறதென்றும், மாரிக்காலத்தில் இவ்வாறு பெருகி மலைமுழுவதும் (அகழிபோல்) சூழ்ந்து ஒருபெரிய ஏரிபோல ஆகிறதென்றும், இதுவே வால்மீகி முனிவர் தமது இராமாயணத்தில் கூறிய ‘சாகரம்’ என்றும், மற்றும் பல சான்றுகளைத் தேசப்படத்துடன் காட்டுகிறார் திரு. டி. பரமசிவ ஐயர்