உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

445


இனாம் கிராமமும், சிவகங்கை தாலுகாவில் மாவிலங்கை என்னும் ஜமீன்கிராமமும் திருவாடானை தாலுகாவில் மாவிலங்கை என்னும் பெயருள்ள ஜமீன், இனாம் ஆகிய இரண்டு கிராமங்களும் உள்ளன.

கேரள நாட்டில் பாதாள லங்கா என்னும் இடமும், தென் கன்னட மாவட்டமாகிய துளுநாட்டில் மூல்கி என்னும் ஊருக்கு அருகில் வளலங்கா என்னும் இடமும் இருந்தன என்று தெரிகின்றன. இவையாவும் இலங்கை என்னும் பெயரால் முடிவது காண்க. அன்றியும், ஆறுகள் கடலுடன் கலக்கிற இடத்தில் பல கிளைகளாகப் பிரிந்து ஏற்படுகிற டெல்ட்டா (Delta) என்று சொல்லப்படுகிற தீவுகளுக்கு ஆந்திர நாட்டில் லங்கா என்று பெயர் கூறப்படுகிறதென்று தெரிகிறது.

ஆகவே, இராவணன் ஆண்ட ஊர் ஒன்றுக்கு மட்டுந்தான் இலங்கை என்று பெயர் உண்டு என்று கருதுவது தவறு. பண்டைக் காலத்தில், இலங்கை என்னும் பெயருள்ள பல ஊர்கள் இருந்தன என்பதற்கு மேலே சான்றுகள் காட்டப்பட்டன.

முடிவுரை

எனவே, தமிழ்நாட்டுக்கு அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைக்கும் இராவணன் ஆண்ட இலங்கைக்கும் தொடர்பு இல்லை என்பதும், இத்தொடர்புடைய கதைகள் பிற்காலத்தில் கற்பிக்கப்பட்டவை என்பதும் தெளிவாகின்றன. இலங்கையின் புராதன நூலாகிய மகாவம்சம் என்னும் நூலில் இராவணன், இலங்கை என்னும் பெயர்களே கூறப்படவில்லை. இராவணன் ஆண்ட இலங்கை, இப்போது மராட்ட நாடு உள்ள பகுதியில், விந்தியமலையைச் சார்ந்த இடத்தில் இருந்தது என்பது ஆராய்ச்சியாளரின் முடிபு. அங்ஙனமாயின், மலையமலை, பாண்டியனுடைய கபாடபுரம் முதலியவை வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகின்றனவே என்றால், இந்தச் சுலோகங்கள் இடைச் செருகல்களாகும். வடமொழியிலே இராமாயணத்திலும், பாரதத்திலும், வேறு நூல்களிலும் பல இடைச் செருகல் சுலோகங்கள் காலந்தோறும் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மறக்கக்கூடாது.