462
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
காலம் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையில் உள்ளகாலம் என்று கூறுகிறார்கள். அதாவது நேர் கடைச் சங்ககாலம் எனவே கடைச் சங்ககாலத்தில் எழுதப்பட்ட சாசனம் இது. பௌத்த மதத்தாரின் “தெய்வ பாஷை”யாக அக்காலத்தில் பாலி பாஷை இருந்தபடியால் இச்சாசனம் பாலிமொழியில்எழுதப்பட்டிருக்கிறது.
இந்தச் சாசனம்,தமிழ் நாட்டிலிருந்து தரை வழியாக அயல் நாட்டுக்குக் குடும்பத்தோடு சென்று வாணிகம் செய்தனர் தமிழர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றது. சங்க காலத்தில் தமிழர் தரை வழியாகப் பெண்டிரையும் அழைத்துக் கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்றனர் என்னும் செய்தியை, கலிங்கநாட்டுக் காரவேல அரசரின் ஹத்திகும்பா சாசனமும் அமராவதி பௌத்த சயித்தியக் கல்வெட்டெழுத்துச் சாசனமும் சற்றும் ஐயத்துக்கிடமில்லாமல் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, 'முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை' என்னும் தொல்காப்பியர் சூத்திரத்துக்கு உரை எழுதிய இளம்பூரண அடிகள், “காலில் (தரை வழியாக அயல்நாடுகளுக்குச செல்வது) பிரிவு தலைமகளை உடன் கொண்டு பிரியவும் பெறும்' என்று கூறியுள்ளது சரியானதென்பதும், நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சரியானதென்று என்பதும் இந்தப் பழம்பொருள் சாசனச் சான்றுகளினால் அறியப்படுகின்றன.
அடிக்குறிப்பு
1. No.80,P.20 Notes on the Amaravati Stupa by J. Burgess, 1882. Archaeological Survey of South India.