பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
473
அவர்களுடைய அரசனான நாகராசனுக்கு இரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். நாகராசன் தன்னுடைய மகளை மலைநாட்டில் வாழ்ந்திருந்த நாகராசனுக்கு மணஞ்செய்து கொடுத்துத் தன்னிடத்தில் இருந்த மணியாசனத்தையும் அவளுக்குப் பரிசாக கொடுத்தான். அவளுக்குக் குலோதரன் என்னும் ஒரு மகன் பிறந்தான். யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த நாகராசன் இறந்துபோனபிறகு அவனுடைய மகனான மகோதரன் யாழ்ப்பாணத்தை (நாக நாட்டை) அரசாண்டான், அப்போது அவனுடைய மருகனான (தங்கையின் மகனான) குலோதரன் அரசாண்டு கொண்டிருந்தான். மகோதரன் தன் தந்தை தன்னுடைய தங்கைக்குப் பரீசாகக் கொடுத்த மணியாசனத்தைப் பெறஎண்ணிக் குலோதரன்மேல் படையெடுத்துப் போர்செய்யச் சென்றான். இருவரும் போர்க்களத்திலே சந்தித்தபோது புத்தர்பெருமான் போர்க்களத்திலே உயரத்தோன்றிப் பேரிருளை உண்டாக்கினார். அந்த இருட்டைக் கண்ட நாகர் நடுங்கி அஞ்சினார்கள். அப்போது புத்தர் வெளிச்சத்தை உண்டாக்கினார். நாகர்கள் மகிழ்ந்து புத்தரை வணங்கி அவருக்கு மணியாசனத்தைக் கொடுத்து அதில் அமரச்செய்தார்கள். மணியாசனத்தில் அமர்ந்த புத்தர் அவர்களுக்குத் தருமோபதேசம் செய்தார். போர்செய்யக் காரணமாக இருந்த மணியாசனம் புத்தருக்கு உரியதாயிற்று. இவ்வாறு நாகர்களின் போரை நிறுத்திய புத்தர். பிறகு வடஇந்தியாவுக்குப் (ஜேதவனத்துக்கு) போய்விட்டார். அவர் அமர்ந்து உபதேசம் செய்த மணியாசனத்தை நாகர் வழிபட்டு வணங்கினார்கள்.21 மணியாசனத்துக்காக நாகஅரசர் போர் செய்ததையும், அப்போது புத்தர்வந்து அந்தப் போரை நிறுத்தியதையும் மணிமேகலைக் காப்பியமும் கூறுகிறது.22
நாக அரசர் போர்செய்யக் கூடியிருந்தபோது இலங்கையில் கலியாணி நாட்டையாண்ட மணியக்கன் என்னும் நாகராசனும் போர்க்களத்துக்கு வந்திருந்தான். அவன் யாழ்ப்பாணத்தை ஆண்ட நாகஅரசனான மகோதரனுடைய தாய்மாமனாவான். அவன் புத்தருடைய உபதேசத்தைக்கேட்டு மகிழ்ந்தான். அவன் கலியாணி நாட்டுக்கு அரசன். கலியாணி நாடு என்பது இலங்கையில் மேற்குக் கரைப்பக்கம் இருந்தது. (இப்போதைய கொழும்புப் பக்கத்தில் கெலனிஓயா என்னும் கெலனியாறு பாய்கிற பிரதேசந்தான் பழைய கலியாணிநாடு.) கலியாணி நாட்டில் நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை ஆண்ட மணியக்கன் புத்தரைத்-