பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
477
என்று தோன்றுகிறது. அதன் பிறகு, பாண்டு வாசுதேவன் என்பவன் இலங்கையை அரசாண்டான். அவன் விசயனுடைய தம்பியாகிய இலாடதேசத்தை அரசாண்ட சுமித்தனுடைய இளையமகன் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால், இவன் பாண்டிநாட்டுப் பாண்டிய அரசகுலத்தவனாக இருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். தீபவம்சம் இவனைப் பாண்டுவாசன் என்றுதான் கூறுகிறது.29
ஆனால், அதற்குப்பின் எழுதப்பட்ட மகாவம்சம் பாண்டு வாசனைப் பாண்டுவாசுதேவன் என்று மாற்றிக் கூறுகிறது.30 பாண்டுவாசன் என்பதன் பொருள் 'வெள்ளாடை அணிந்தவன்' என்றும் 'பாண்டி நாட்டில் இருந்து வந்தவன்' என்றும், ஆகும். வெள்ளாடை அணிந்தவன் என்பதைவிடப் பாண்டிய நாட்டிலிருந்து வந்தவன்; அதாவது, பாண்டி நாட்டவன் என்று கூறுவதே பொருத்தமாகும்.31 ஆனால் மகாவம்சம், புத்தர் இலங்கைக்கு வந்தார் என்று கூறி அவரை இலங்கையோடு தொடர்புபடுத்தியது போலவே, பாண்டுவாசனைப் பாண்டி நாட்டிலிருந்து சென்ற பாண்டிய அரச மரபினனாகத் தோன்றுகிறான். இவன் கி.மு. 444 முதல் 414 வரையில் 30 ஆண்டுகள் அரசாண்டான்.
சிங்களவர் ஆட்சி
பாண்டுவாசனுக்குப் பத்து ஆண் மக்களும் ஒரு மகளும் பிறந்தனர். மூத்தமகனுக்கு அபயன் என்றும், கடைசி மகளுக்கு சித்தா என்றும் பெயர். சித்தாவின் மகன் தன்னுடைய அம்மான்களைக் (பாண்டுவாசனுடைய மக்கள் பதின்மரைக்) கொன்றுபோட்டு அரசாள்வான் என்று நிமித்திகர்கள் கூறினார்கள். ஆகவே, அந்த அம்மான்கள் தங்கள் தங்கைக்கு மகன் பிறந்தால் அவனைக் கொன்றுவிடுவதற்கு வழிசெய்திருந்தார்கள். சித்தாவுக்கும் தீக்காமணி என்பவனுக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்த ஆண்குழந்தையை அம்மான்களிடம் அகப்படாதபடி ஒளித்துவைத்து வளர்த்தார்கள். அவனுக்குப் பெயர் பாண்டுகாபயன் என்பது.
பாண்டுவாசன் இறந்தபிறகு அவனுடைய மூத்தமகனான அபயனுக்கு முடிசூட்டினார்கள். அவனுடைய தம்பிமார் ஒன்பதுபேரும், தங்கள் தங்கையின் மகனைக்கொல்ல அவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பாண்டுகாபயன் அவர்கள் கையில் அகப்படாமல் மகாவலி கங்கையாற்றின் தென்கரையில் மறைந்து வாழ்ந்திருந்தான். அவன் பதினாறு வயதடைந்தபோது தனக்குச் சேனையைச் சேர்த்துக்-