பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
481
வழக்கப்படி குன்றின்மேல் கோயில்கட்டி வணங்கினார்கள். (பிற்காலத்தில் சிங்களவர், குன்றின்மேல் இருந்த முருகனைக் கீழேகொண்டுவந்து இப்போதுள்ள கோயிலில் வைத்தனர்.) உரோகண நாட்டில் அக்காலத்திலிருந்த இன்னொரு கோயில் அட்டாலயம் என்பது. அதுவும் முருகன் கோயில் என்று தோன்றுகிறது. அசோகச் சக்கரவர்த்தி அனுப்பிய போதிமரத்துக் கிளையை அநுராதபுரத்தில் திஸ்ஸ அரசன் நட்டுச் சிறப்புச் செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த பெருமக்களில் கதிர்காமத்துப் பெருமக்களும் வந்திருந்தனர் என்று மகாவம்சம் கூறுகிறது.37 பெருமக்கள் என்று பன்மையில் கூறுகிறபடியால் உரோகண நாட்டை அரசாண்டவர் பாண்டிய சகோதரர்கள் என்று தெரிகிறது. உரோகண நாட்டரசர்கள் காமணி என்று பெயர் பெற்றிருந்தனர். அவர்கள் உரோகண நாட்டையும் அதற்கு வடக்கே கடற்கரையோரமாக இருந்த கிழக்கு இலங்கையையும் அரசாண்டார்கள் என்பதை அவர்கள் அங்கு எழுதியுள்ள பாறைக்கல் சாசன எழுத்துகளிலிருந்து அறிகிறோம் என்பதை முன்னமே கூறினோம். இலங்கையில் அம்பரை மாவட்டத்தில் ஹெனன்னெகல என்னும் இடத்திலுள்ள மலைக்குகையில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துச் சாசனம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்தக் கல்வெட்டு வாசகத்தின் இறுதியில் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. மீன் அடையாளம் பாண்டியருக்குரியது என்பதை அறிவோம். இந்தச் சாசனம் எழுதிய அரசர் பாண்டியர் மரபைச் சேர்ந்தவர் என்பதற்கு இது முக்கியமான சான்றாகும்.38 மேலும், இந்தச் சாசனத்தில் மஜிமகாராசன் என்னும் பெயர் கூறப்படுகிறது. அதாவது, மச்ச (மீன்) மகாராசன் என்று கூறப்படுகிறான். பழைய சிங்கள மொழியில் மஜி என்றால் மச்சம் (மீன்) என்பது பொருள். ஆகவே, மஜிமகாராசன் என்றால் மீன் அடையாளத்தையுடைய மகாராஜன் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்தச் சாசனத்தின் இறுதியிலுள்ள மீன் உருவம், இவனுடைய அடையாளம் மீன் (கயல்) என்பதை ஐயமில்லாமல் தெரிவிக்கிறது. ஆகவே, இந்த அரசர் பரம்பரை மீன் அடையாளத்தையுடைய பாண்டியப் பரம்பரை என்பது தெரிகிறது. மச்ச மகாராசனும் அவனுடைய மகனான காமணி திஸ்ஸனும் சேர்ந்து பௌத்தப் பிக்குகளுக்குச் சில கிராமங்களையும் அவற்றைச் சேர்ந்த பொருள்களையும் தானஞ்செய்ததை இந்தக் கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது. இந்த அரசர்கள் பௌத்த பிக்குச் சங்கத்துக்கு ஏழு