பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
499
தங்கையான சீவாலி நான்கு திங்களும் (கி.பி. 92) அரசாண்டனர். சீவாலியின் உறவினனான இளநாகன் அவளை அரச பதவியிலிருந்து இறக்கித் தான் ஆட்சியைக் கைப்பற்றி அரசாண்டான்.
இளநாகன் ஆட்சியைக் கைப்பற்றி அரசாண்டபோது அரச ஊழியத்தில் இருந்த இலம்பகன்னர் என்னும் இனத்தாருக்கும் இவனுக்கும் பகை ஏற்பட்டது. இலம்பகன்னர் பாண்டி நாட்டினர் என்பது தெரிகின்றது. அரச ஊழியத்திலிருந்த இலம்பகன்னர் இளநாகனை அரண்மனையில் சிறைப்படுத்தி ஆட்சியைத் தாமே நடத்தினர். சிறைப்பட்ட இளநாகன் சிறையிலிருந்து தப்பி மகாதிட்டைத் துறைமுகத்துக்குச் சென்று, அங்கிருந்து தமிழ்நாட்டுக்குப் போய்விட்டான். அவன் தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். தமிழ்நாட்டில் எந்த இடத்தில் தங்கினான் என்பது தெரியவில்லை. இளநாகன், மூன்று ஆண்டுக்குப்பிறகு தமிழச்சேனையைச் சேர்த்துக்கொண்டு கப்பலில் பிரயாணஞ்செய்து இலங்கையின் தென்கிழக்கிலிருந்த உரோகண நாட்டில் வந்து இறங்கினான். பிறகு, அங்கிருந்து அநுராதபுரத்துக்கு வந்து இலம்பகன்னர் மேல் போர்செய்து அவர்களை வென்று ஆட்சியை மீட்டுக்கொண்டான். இளநாகன் ஆறு ஆண்டுகள் (கி.பி. 95-101) அரசாண்டான் (மகாவம்சம் 35: 15-45). இளநாகனுடைய மகன் சந்தமுக சிவன் (சந்திரமுக சிவன்)என்பவன். இளநாகன், சந்தமுக சிவனுக்குத் தமிழ்நாட்டு அரசன் மகளைத் திருமணஞ்செய்திருந்தான். இந்தத் திருமணம், இளநாகன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில் நடந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.
சந்தமுக சிவன் இலங்கையை எட்டு ஆண்டு எட்டுத்திங்கள்கள் (கி.பி. 101-110) அரசாண்டான். இவனுடைய இராணியின் பெயர் தமிளாதேவி (தமிழத்தேவி). சந்தமுக சிவன் மணிகாரகாமகம் என்னும் ஊரில் ஓர் ஏரியை அமைத்து, அந்த ஏரியை இஸ்ஸர பௌத்த விகாரைக்குத் தானமாகக் கொடுத்தான். அதாவது, அந்த விகாரையிலிருந்த பௌத்தப் பிக்குகளின் உணவுக்காகப் பயிர் செய்யப்படும் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச அந்த ஏரியைத் தானஞ்செய்தான். இவனுடைய இராணியாகிய தமிழத்தேவியும், மணிகாரகாமகத்திலிருந்து தனக்குக் கிடைத்த இறைப் பணத்தைப் பௌத்தப் பிக்குகளுக்குத் தானஞ்செய்தாள் (மகாவம்சம் 35: 45- 48).