58
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
குமணனைக் கண்டு ஒரு செய்யுள் பாடினார்.[1] அச்செய்யுளில் அப்புலவருடைய வறுமை நெஞ்சையுருக்கும் தன்மையதாக இருந்தது. அச்செய்யுளைக் கேட்ட குமணன், தன்னுடைய துன்பத்தைவிடப் புலவரின் துன்பம் கொடியது என்று உணர்ந்து, தன் கையில் பொருள் இல்லாதபடியால், தன்னுடைய வாளைப் புலவரிடம் கொடுத்து, தன் தலையை வெட்டிக் கொண்டுபோய்த் தன் தம்பியிடங் கொடுத்தால் அவன் பரிசாகப் பொருள் கொடுப்பான் என்று கூறினான். வாளைக் கையில் வாங்கிக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து குமணன் வாள்கொடுத்த செய்தியைக் கூறினார் (புறம் 165). பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. குமணனைப் பற்றி இவ்வளவுதான் தெரிகின்றது. குமணனுடைய முதிரம் என்னும் ஊர் கொங்கு நாட்டில் எவ்விடத்தில் இருந்தது என்பது தெரியவில்லை. இளங்குமணனைப் பற்றியும் ஒன்றுந் தெரியவில்லை.
விச்சியரசர்
விச்சிமலையையும் அதனைச் சார்ந்த நாட்டையும் அரசாண்டவர் விச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தனர். விச்சியூரில் விச்சிமலை இருந்தது. பச்சைமலை என்று இப்போது பெயர் பெற்றுள்ள மலையே பழைய விச்சிமலை என்று கருதுகிறார்கள். பச்சைமலை இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கின்றது. விச்சியரசரைக் ‘கல்லக வெற்பன்’ என்றும் ‘விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோ’ என்றும் கபிலர் கூறுகின்றார். விச்சிமலைமேல் இருந்த ஐந்தெயில் என்னும் கோட்டையில் விச்சியரசர் வாழ்ந்தார்கள். விச்சி நாட்டில் குறும்பூர் என்னும் ஊர் இருந்தது. அங்குப் பாணர் என்னும் இனத்தார் வசித்து வந்தார்கள். விச்சி மன்னன் பகைவரோடு போர் செய்தபோது, அவன் புலி போன்று வீரமாகப் போர் செய்ததைப் பாணர்கள் கண்டு ஆரவாரஞ் செய்து மகிழ்ந்தார்கள் என்று பரணர் கூறுகின்றார்.[2]
பாரி வள்ளல் போரில் இறந்தபிறகு, அவனுடைய பரம்பு நாட்டைப் பகைமன்னர் கைக்கொண்ட பின்னர், பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் அழைத்துக் கொண்டு விச்சிக்கோவிடம் வந்து அவர்களைத் திருமணஞ் செய்துகொள்ளும்படி கேட்டார். அதற்கு விச்சியரசன் இணங்கவில்லை (புறம் 200 அடிக்குறிப்புக் காண்க) விச்சியரசன் தம்பி இளவிச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தான்.