உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

79



நனவின் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே” (9ஆம் பத்து 5:7-13)

பொறையன் மரபைச் சேர்ந்த இந்தச் செல்வக் கடுங்கோவுக்கு மாந்தரங் கடுங்கோ என்ற பெயரும் வழங்கி வந்தது என்பது தெரிகிறது. இவன் காலத்தவராகிய பரணர் தம்முடைய செய்யுள் ஒன்றில் இப்பெயரையும் இவனுடைய வள்ளன்மையையுங் கூறுகிறார்.

“இலவ மலரன்ன அஞ்செந் நாவில்
புலமீக் கூறும் புரையோர் ஏத்தப்
பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவவினி வாழிய நெஞ்சே.” (அகம்.142:1-7)

இவ்வரசனைப் பரணர் மாந்தரன் என்று கூறியது போலவே கபிலரும் வனை மாந்தரன் என்று கூறியுள்ளார். இவ்வரசனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை 9ஆம் பத்தில் பாடிய பெரும்குன்றூர்கிழார் அவனை மாந்தரனுடைய மரபில் வந்தவன் என்று கூறுகிறார் (9ஆம் பத்து 10: 9-13). மாந்தரன் பெரும் புகழ் படைத்து அறம் வாழ்த்த நன்றாக அரசாண்டான் என்று கூறுகிறார்.

“வாள்வலி யுறுத்துச் செம்மை பூண்டு
அறன் வாழ்த்த நற்காண்ட
விறன் மாந்தரன் விறன் மருக.” (9ஆம் பத்து 10:11-13)

செ.க.வா. ஆதனின் சமகாலத்தில் இருந்த பாண்டிய அரசன் ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன் இவர்கள் காலத்துச் சோழ அரசன் யார் என்பது தெரியவில்லை. கொங்கு நாட்டையரசாண்ட இவன் காலத்துச் சேர அரசர் இவனுடைய தாயாதித் தமயன்மாராகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் (இ. வ. நெ. சேரலாதன்) அவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் ஆவர். இ. வ. நெ. சேரலாதன், வேளாவிக் கோமான் மகளைத் திருமணம் செய்திருந்தான். அவளுடைய தங்கையை (வேளாவிக் கோமான் பதுமனுடைய இளைய மகளை) செ.க.வா. ஆதன் மணஞ்செய்திருந்தான் என்பதை முன்னமே கூறியுள்ளோம். எனவே இவர்கள் இருவரும் சமகாலத்திருந்தவர் என்பது ஐயமில்லாமல் தெளிவாகத் தெரிகின்றது.