உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

85


(பெருஞ்சேரல் இரும்பொறைக்கு) உரியதென்று கூறுகிறார். இதனால், பரணர் காலத்திலேயே ஓரிக்குரியதாக இருந்த கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரலிரும் பொறைக்கு உரியதாயிற்று என்பது தெரிகிறது.

8ஆம் பத்துப் பதிகம், பெருஞ்சேரலிரும்பொறை ‘கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை’ போர்வென்றான் என்று கூறுகிறது. இதற்குப் பழைய உரை இவ்வாறு விளக்கங் கூறுகிறது: “இதன் பதிகத்துக் கொல்லிக் கூற்றமென்றது, கொல்லி மலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை. நீர்கூர்மீமிசை யென்றது அந்நாட்டு நீர்மிக்க மலையின் உச்சியை.”

தகடூர்ப் போர்

கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றின பிறகு பெருஞ் சேரலிரும்பொறை தகடூர் அதிகமான்மேல் படையெடுத்துச் சென்று தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். அப்பொழுது பாண்டியனும் சோழனும் அதிகமானுக்கு உதவியாகச் சேனைகளை யுதவினார்கள். தகடூர்ப் போர் நிலைச் செருவாகப் பல காலம் நடந்தது. பெருஞ்சேரலிரும்பொறைக்கு அவனைச் சார்ந்த சிற்றரசர் பலர் துணை நின்றார்கள். கொல்லி நாட்டை வென்ற மலையமான் திருமுடிக்காரி இந்தப் போரிலும் பெருஞ்சேரலிரும்பொறையின் பக்கம் இருந்து போர் செய்தான். தகடூர்க் கோட்டை பலம் பொருந்தியதாக இருந்தபடியாலும் அதன் அரசனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் அவன் மகனான பொருட்டெழினியும் போரில் புறங்கொடா வீரர்களாக இருந்த படியாலும் அதை எளிதில் வெல்ல முடியவில்லை. அதிகமானுடைய சேனைத்தலைவன் பெரும்பாக்கன் என்பவன். தகடூர்ப் போர்க்களத்தை நேரில் கண்ட புலவர்கள் அரிசில் கிழார், பொன்முடியார் முதலியவர்கள் கடைசியில் தகடூரைப் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான். அந்த வெற்றியை அரிசில்கிழார் அவன்மேல் 8ஆம் பத்துப் பாடிச் சிறப்பித்தார்.6

தகடூர்ப் போரை பற்றித் தகடூர் யாத்திரை என்னும் நூல் இருந்தது. அது சென்ற 19ஆம் நூற்றாண்டில் மறைந்து விட்டது.7

பெருஞ்சேரலிரும்பொறை தன் ஆட்சிக் காலத்தில் சில நாடுகளைக் கைப்பற்றித் தன்னுடைய இராச்சியத்தைப் பெரிதாக்கினான். அவன் தன்னை 8ஆம் பத்தில் பாடிய அரிசில் கிழாரைத் தன்னுடைய அமைச்சராக்கினான் (8ஆம் பத்துப் பதிகச் செய்யுள்).