உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

213

பொறுமையோடு கருமமே கண்ணாகக் காத்திருப்பார்கள். எண்ணித் துணிவர்; துணிந்தபின் அதனைச் செய்து முடிப்பர். கோழைகள் என்றும் இன்பம் பெறமாட்டார்கள்...”

இவ்வாறு குடிலன் தன் காரியத்தைப்பற்றித் தனக்குள் எண்ணிக் காண்டிருக்கும்போது அரசன் வருகிறான். குடிலன் அரசனை வரவேற்று அணிவகுப்பைக் காட்டுகிறான். பிறகு பேச்சோடு பேச்சாக, கோட்டைக் காவலுக்கு நாராயணனை ஏற்படுத்தி யிருப்பதாகவும் அப் பணியை நாராயணன் அரைமனதோடு ஏற்றுக்கொண்டு போனதாகவும் கூறி நாராயணன் மீது அசூயையை உண்டாக்குகிறான். அரசன் வந்ததைக் கண்டு போர்வீரர் ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர். போர் அணிவகுப்பைக் கண்டபிறகு அரசன், வீரர்கள் வீறு கொள்ளும்பொருட்டு அவர்களுக்கு வீரமொழி கூறுகிறான்:-

"வீரர்களே! உங்கள் போர்க் கோலத்தைக் கண்டு மகிழ்ந்தோம்! உங்களுக்கு வாய்த்திருக்கும் இந்தப் பெரும்பேறு யாருக்கு வாய்க்கும்? தாயினும் சிறந்த தாயாகிய உங்கள் பாண்டி நாட்டுக்குத் தீங்கு செய்யப் படையெடுத்து வந்தனர். உங்கள் தாய்நாட்டைக் காப்பதற்காக நீங்கள் இப்போர்க்களத்தில் வந்திருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்தில் பொங்கும் சினத்தீ அடங்காமல் மேலே புகைந்து உங்கள் கண்களில் பொரிகிறது. உங்கள் புருவம் நெறிப்பதும் மீசை துடிப்பதும் உங்கள் முகக் குறிப்பும் கண்டு பாண்டித்தாய் மகிழ்ச்சியடைகிறாள். உங்களை ஊட்டி வளர்த்த தாமிரபரணித் தாய் அதோ அலையெடுத்து ஆரவாரிக்கிறாள்! (வீரர்கள் வீறுகொண்டு ஆரவாரம் செய்கிறார்கள்.) உங்களை ஊட்டி வளர்த்த தாமிரபரணித் தாய் கூறுவதைக் கேளுங்கள்! ‘என் அருமை மக்களே! என் நீரைக் குடித்து வளருங்கள். என் நீரைக் குடித்து வளர்ந்த நீங்கள் ஒப்புயர்வில்லாத வீரர்களாகி, சுதந்தரத்தின் முத்திரையை உங்கள் இருதயத்தில் பதிய வைத்திருக்கிறீர்கள். அயலான் ஒருவன் என்னைத் தீண்டுவானாயின், உங்கள் மார்பில் குருதியைப் பொழிந்து உங்கள் உயிரைக் கொடுத்தாகிலும் என்னைக் காப்பாற்றுங்கள்' என்று ஆணையிடுகிறாள். தாமிரபரணியின் நீரைக் குடித்து வளர்ந்த நீங்கள் போர்க்கோலத்துடன் களத்தில் நிற்பதைக் கண்டு அவள் உங்களை வாழ்த்துகிறாள். (வீரர்கள் வீறுகொண்டு ஆரவாரம் செய்கின்றனர்.)