உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

முதலிய பாஷைகளிலுள்ள நாடக ரீதியைப் பின்றொடர்ந்து இயற்றிய 'மனோன்மணீயம்' என்னும் இந் நாடகம், பூர்வீக இலக்கியங்களுடன் சற்றேனும் உவமிக்க இயையாதெனினும், ஆஞ்சனேயராதி வானர வீரர்கள் சேதுபந்தனஞ் செய்யுங் காலத்தில் கடனீரிலே தோய்ந்து மணலிற் புரண்டு அம் மணலைக் கடலில் உகுத்த சிறு அணிற் பிள்ளையின் நன்முயற்சி அங்கீகரிக்கப்பட்டவாறே, கல்வி கேள்வியால் நிறைந்த இத் தலைமுறைச் சிரேஷ்டர் அங்கீகரித்து எனது இச் சிறு முயற்சியும் தமிழ் மாதாவுக்கு அற்பிதமாம்படி அருள்புரியாதொழியார் என நம்பிப் பிரகடனம் செய்யப்படுகின்றது.

இந்நாடகம் வடமொழி ஆங்கிலேயம் முதலிய பாஷைகளில் உள்ள நாடக வழக்கிற் கிசையச் செய்திருப்பதால் இதனுள்ளடங்கிய கதை அங்கங்கே நடந்தேறும் சம்பாஷணைகளாலும் அவாய் நிலைகளாலும் கோவைப்படுத்தி அறிந்துகொள்ள வேண்டியதாயிருக்கின்றது. இக்கதை புதிதாக இருப்பதினால் அவ்விதம் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளுவோர்க்கு அநு கூலமாகச் சுருக்கி ஈண்டுக் கூறப்படுகின்றது. கதாசங்கிரகம்

முற்காலத்தில் மதுரைமா நகரில் ஜீவகன் என ஒரு பாண்டியன் அரசு புரிந்துவந்தான். அவன் பளிங்குபோலக் களங்கமில்லாத நெஞ்சினன். அவன் மந்திரி குடிலன் என்பவன், ஒப்பற்ற சூழ்ச்சித் திறமை யுடையவ னாயினும், முற்றும் தன்னயமொன்றே கருதும் தன்மையனாயிருந்தான். அதனால் அரசனுக்கு மிகவும் உண்மையுடையவன்போல் நடித்து அவனை எளிதிலே தன் வசப்படுத்திக்கொண்டான். அங்ஙனம் சுவா தீனப்படுத்திய பின்பு, தன் மனம் போனபடியெல்லாம்அரசனையாட்டித் தன் செல்வமும் செல்வாக்கும் வளர்த்துக்கொள்ளத் தொன்னகராகிய மதுரை இடங்கொடாதென உட்கொண்டு அந்நகரின்மேற் பாண்டியனுக்கு வெறுப்புப் பிறப்பித்து, திருநெல்வேலி என்னும் பதியிற் கோட்டை கொத்தளம் முதலியன இயற்றுவித்து, அவ்விடமே தலைநகராக அரசன் இருந்து அரசாளும்படி செய்தான். முதுநகராகிய மதுரை துறந்து கெடுமதி யாளனாகிய குடிலன் கைப்பட்டு நிற்கும் நிலைமையால் ஜீவகனுக்கு யாது விளையுமோ என இரக்கமுற்று அவனுடைய குலகுருவாகிய சுந்தர முனிவர் அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து ஆதரிக்க எண்ணித் திருநெல்வேலிக் கருகிலுள்ள ஓர் ஆச்சிரமம் வந்தமர்ந் தருளினர். முனிவர் வந்து சேர்ந்தபின் நிகழ்ந்த கதையே இந் நாடகத்துட் கூறப்படுவது.