உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

99

இரண்டாம் களம்

காலைவேளையின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகொண்டு நடராஜன் நிற்கிறான். அக்காட்சிகளைப் பற்றித் தனக்குத் தானே பேசிக்கொள்கிறான். ஒன்றும் புலப்படாமல் இருள் முடிக்கிடந்த இந்த உலகம், சூரியன் ஒளிபரப்பிப் புறப்படுகிற இக் காலைவேளையில், ஓவியன் ஒருவன் கிழிச்சீலையிலே வர்ணங்களைக் கொண்டு ஓவியம் எழுதிக் காட்டுவதுபோலக் காணப்படும் காட்சி அழகானது. சுரைக் கொடி படர்ந்த வீட்டுக் கூரையின் மேலே ஏறி ஒய்யாரமாக நிற்கிற சேவல் சிறகை அடித்துக்கொண்டு கொக்கரக்கோ என்று கூவுவதும், கருநிறக் காகங்கள், சூரியன் தம்மையும் இருள்கூட்டங்கள் என்று கருதித் துரத்து வானோ என்று ஐயங்கொண்டு 'நாங்கள் காக்கைகள், இருட் கூட்டம் அல்ல' என்று சொல்லுவது போலக் கா, கா என்று கூவிக் கொண்டு நாற்புறமும் பறந்து செல்லும் காட்சியும், பறவைக் கூட்டங்கள் பலநிறம் அமைந்த தமது சிறகுகளைத் தாளம் போடுவதுபோல அசைத்து இனிய குரல்களினால் பாடுவதும் காண்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது.

இதோ நீரோடும் இந்த வாய்க்காலில் ஆணும் பெண்ணும் ஆன இ ரண்டு நாரைகள் அன்புடன் காதல் செலுத்துகின்றன. வாணி ! நற்குணம் வாய்ந்த நங்காய் ! அன்றொரு நாள் நாம் இருவரும் அன்பு செலுத்திய இடமும் இதுதானே ! புத்தம் புதிய குவளைமலரைப் பறித்து அன்று உன்னிடம் கொடுத்தபோது, அதனை நீ உன் கூந்தலில் சூட்டிக் கொள்ளாமல், ஓடுகிற நீரில் விட்டு வேடிக்கை பார்த்தனை. உடனே நான் என்ன எண்ணுவேனோ என அஞ்சி நீ நெஞ்சம் கலங்கினாய். அந்தக் காட்சி இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது. வாணி! கவலைப் படாதே. நீ வேண்டுமென்று அப்படிச் செய்யவில்லை என்பதை நான் அறிவேன். உன் உள்ளமும் என் உள்ளமும் ஒன்றுபட்ட பின்னர் உன் கருத்து என்ன என்பதை நான் அறியேனா?' இவ்வாறு நடராஜன் தனக்குள் எண்ணமிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ கூறிய “வாணி” என்னும் சொல் அவன் காதில் விழுந்தது. அச்சொல் வந்த வழியே திரும்பிப் பார்த்தான். ஒருபுறத்தில் பலதேவனும் அவனுடைய தோழனும் நற்றாய் ஒருத்தியும் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். கண்டு, மறைந்து நின்று அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கிறான்.

“நீ என் மகளைக் கெடுத்தாய்; உன்னை நம்பி அவள் கெட்டாள். அவளுடைய வாழ்வு அழிந்தது. வாணியை நீ மணம்செய்யப்